Saturday, August 12, 2017

நேற்று பருத்தித்துறையில் குடியேறினார் புத்தர்!

நேற்று பருத்தித்துறையில் குடியேறினார் புத்தர்!

பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் அமைந்துள்ள இந்து ஆலயத்திற்கு அருகில் புதிதாக புத்தரு டைய சிலை ஒன்றை இராணுவத்தினர் அடாத்தாக அமைத்துள்ளனர்.

வழிபாட்டு தலங்கள் அமைக்கப்படும் போது உள்ளூராட்சி திணைக்களங்களில் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது இலங்கையின் சட்டமாகும்.

ஆனால் இந்த நடை முறை குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டதில் பின்பற்றப்படவில்லை என உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் உள்ள வைரவ கோவிலிற்கு பக்கத்தில் உள்ள அரசமரத்தின் கீழ் சிறிதாக புத்தர் சிலை ஒன்று கடந்த 2010 ஆம் ஆண்டள வில் இராணுவத்தினரால் வைக்கப்பட்டி ருந்தது.

இந்த சிலை சிறிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக இராணுவத்தினரால் குறித்த புத்தர் சிலை இருந்த இடம் விஸ்தரிக்கப்பட்டு தற்போது புதிதாக புத்த கோவில் போன்ற அமைப்பில் புத்தர் சிலையுடனான கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு அருகில் முன்னரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு இராணுவத்தினர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் யுத்தத்திற்கு முன்பிருந்தே அப்பகுதியில் நிரந்தரமாக உள்ள இந்து கோவிலுக்கு நடத்தப்பட்டு வந்த பூஜை வழிபாடுகள் மற்றும் பொங்கல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தேவையான இடவசதி போதாமையாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த கோவிலுக்கு அருகாமையில் பாரிய படை முகாம் ஒன்று காணப்படுவதோடு, படையினரால் உணவகம் ஒன்றும் நடத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை பருத்தித்துறை முனை பகுதியிலும் தனியார் காணி ஒன்றில் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டு நீண்டகாலமான நிலையில், அதுவும் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆலமரங்கள் காணப்படும் இடங்களில் இந்து கோவில்கள் காணப்பட்டாலும் அதனை மறைத்து புத்த கோவில்க ளை அமைக்கும் முயற்சிகளில் இராணுவத்தினர் இறங்கியுள்ளமை அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மன்னார் எழுத்தூரில் மூவர் கைது!

30 கிலோ கேரள கஞ்சாவுடன் மன்னாரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் – எழுத்தூர் சந்திப் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரும், கொழும்பு பொலிஸ் விசேட செயலணியினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த மூவரும் நேற்று (11) கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
விற்பனைக்காக கொண்டு சென்றபோதே மூன்று பொதிகளில் வைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சாவுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாண இளைஞன் தற்கொலை!

இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சுவிட்சர்லாந்தில் தற்கொலை செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த 27 வயதான தயாகரன் கந்தசாமி என்பவர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் சுவிட்சர்லாந்தின் லுசர்ண் நகரில் வசித்து வந்துள்ளதாக கூறப்படும் அதேவேளை, நேற்று முன்தினம் அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை தற்கொலைக்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் பற்றி எரிந்த தனியார் பேருந்து: 42 பயணிகளின் நிலை..?

பெங்களூரில் இருந்து சென்னைக்கு சென்ற தனியார் ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை 8.20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்தில் 42 பயணிகள் இருந்ததாகவும், ஆனால் தெய்வாதீனமாக யாரும் எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் தெரியவருகிறது.
குறித்த தனியார் பேருந்து திருமழிசை சிக்னலில் நின்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பின்பக்கத்தில் உள்ள என்ஜினில் இருந்து புகை வெளியே வந்தது. இதை பஸ் அருகே நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
உடனே பேருந்து சாரதியிடம் புகை வெளியே வருவது குறித்து தெரிவித்தனர். அவர் துரிதமாக செயல்பட்டு பயணிகளை உடனடியாக பேருந்தை விட்டு வெளியேற்றியுள்ளார்.
சிறிது நேரத்தில் என்ஜினில் தீப்பிடித்து பேருந்து முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு குழுவினர்,  கடுமையாக போராடி தீயை சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

வவுனியாவில் வாளுடன் ஒருவர் கைது!

வவுனியாவில் வாள் ஒன்றை வைத்திருந்தவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா கேகவத்தை 12 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் 25 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட வாள் 21.5 அங்குளம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவரது வீட்டில் இருந்து வில்லுத்தகடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வந்து தொழில் புரிந்து வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நேற்று (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

ஓகஸ்ட் 12: பேரழகி கிளியோபாட்ரா மரணம்

பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் முடிசூட இயலாது.
எனவே கிளியோபாட்ரா தனது சகோதரர்களை திருமணம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார்.
அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு வயதென்றும், அவரது சசோதரருக்கு 10 வயது  எனத் தெரிகிறது.
இவர் தனது தந்தை ஆட்சியிலிருந்த பொழுதே, அதிகாரத்தினை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.
கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளை திருமணம் செய்துகொள்கிறார். இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் சிசேரியன் எனக் கூறப்படுகிறது.
நெடுநாள் கழித்து ரோமாபுரிக்கு சென்ற சீசர் தனது நண்பன் புருட்ஸ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நடைபெற்றது.
கணவர் துணையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள். அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார்.
அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதரனையும் கிளியோபட்ராவே கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றி போனது.
ஆண்டனி- கிளியோபட்ராவிற்கு இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ் என இரட்டையர்கள் பிறந்தார்கள்.
அதன்பின் தொலமி பிலடெல்பஸ் என்பவரும் பிறந்தார். சீசரின் வாரிசான ஆக்டோவியஸ் சீசர் கிளியோபட்ராவை எதிர்த்தார்.
எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொலை செய்யப்பட்டார்.
ஆண்டனியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபட்ரா, தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப் பாம்புகளை தீண்டும்படி செய்து உயிர் துறந்தாள்.
கிளியோபாட்ராவின் மரணத்தினை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் வேறுவிதமாக கூறுகிறார்கள்.
கிளியோபாட்ரா உடலழகு மீது மிகுந்த கவனம் செலுத்தியவர் என்பதால், பாம்பின் விஷம் தீண்டி இறந்தால் முகம் விகாரமடையும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்திருக்க மாட்டார் என்கிறார்கள்.
கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் வழக்கதிலிருந்த கொடிய தாவர விஷத்தினை அருந்தியே இறந்தார் என்கிறார் செபர் எனும் வரலாற்று அறிஞர்.
பண்டைய பாடலாசிரியர்களும் இதையே பாடல்களில் பாடியுள்ளார்கள் என்ற போதும், கிளியோபட்ரா பாம்பு தீண்டி இறந்தார் என்பதையே பல்வேறு ஓவியங்கள் விளக்குகின்றன.
கிளியோபாட்ராவை பேரரறிவு உடையவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவர், வானியல், ஜோதிடம் முதலிய பல கலைகளில் சிறந்து விளங்கியதாகவும், தானே ஏழுவகையான வாசனை திரவியங்களை தயாரித்ததாகவும் கருத்துண்டு.
ஏழு மொழிகளை பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
எகிப்தினை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்ற அவள் தனது வாழ்வை தியாகம் செய்தவள் என்ற கருத்தும் காணப்படுகிறது.
தினம் பாலில் குளிப்பவள், கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள், உடல் முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள் என்ற கருத்தும் உண்டு.

51 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை: கனடா தம்பதி யாழில் முறைப்பாடு!!

இலங்கையில் வைத்து சுமார் 51 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்து அதன் பிரதியை கனடா நாட்டில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ளவே 89 பவுண் நகைகள் கொள்ளை என கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் திட்டமிடப்பட்ட பொய் முறைப்பாடு என கொடிகாமம் பொலிஸாரின் இறுதி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ம் திகதி திங்கட்கிழமை வறணி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 இலட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்தருந்த தம்பதிகளால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் அடுத்தநாள் முறையிடப்பட்டிருந்தது.
இதன்போது வீட்டிலிருந்த இரண்டு பெண்களில் கனடா நாட்டிலிருந்து வந்திருந்த பெண்ணின் நகைகள் மட்டுமே திருடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
அத்துடன் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கத்தியைக் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியே கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தலைமையில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இந்த முறைப்பாட்டினால் கொடிகாமம் பொலிஸாருக்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயர்மட்டத்திலிருந்து பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
தொடர் விசாரணைகளின் போது இம்முறைப்பாடு தொடர்பாக 6 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
விசாரணைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் எதிர்வரும் 16 ம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதன்போது பொய் முறைப்பாடு வழங்கிய கனடா நாட்டில் இருந்து வருகை தந்த தம்பதிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறும் கொடிகாமம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற செயல். வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இவ்வாறு பொய் முறைப்பாட்டினை பதிவு செய்து காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது.
பொய் முறைப்பாடு செய்தவர்களை நீதிமன்ற உத்தரவின்றி மேலதிக நடவடிக்கைக்கு உட்படுத்த முடியாது.
எனினும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கமைய இவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.