Friday, August 4, 2017

ரயிலுடன் மோதிய பேருந்து: உயிருக்குப் போராடும் சாரதி

வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த அரச பேருந்து ஒன்று புகையிரத கடவையை கடக்க முற்பட்டவேளை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த வவுனியா-மெனிக்பாமிற்கான அரச பேருந்து புகையிரத கடவையை கடக்க முற்பட்டவேளை மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியுள்ளது
இந்த விபத்தில் அரச பேருந்தின் சாரதியான ரஹீம்(30) மற்றும் நடத்துனர் உட்பட 6பேர் படுகாயமடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பேருந்தின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும்  அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் இன்றைய தினத்தில் சுதுமலையில் ஆற்றிய உணர்ச்சிகர உரை இது!

சிங்கள அரசிடம் இருந்து தங்களுக்கான விடுதலைப் போராட்டத்தை நடத்திவந்த தமிழீழத் தமிழர்கள், ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைச் சற்றும் எதிர்பார்த்திக்கவில்லை. ஏனென்றால் இந்தியா மற்றும் இலங்கை அரசியல் நலன்சார்ந்து போடப்பட்ட அந்த ஒப்பந்தம், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனைப் பற்றி சிறிதும் கருத்தில்கொள்ளவில்லை. தங்களின் சுதந்திரத்துக்காகப் போராடிவந்த ஈழத் தமிழர்களுக்கு 1987-ம் வருடம் ஜூலை 29-ம் நாள் போடப்பட்ட அந்த ஒப்பந்தம் ஒரு பேரிடிதான். இதை, தமிழ் மக்கள் மட்டுமல்ல... விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு ஏன்? இந்த ஒப்பந்தத்துக்குச் சிங்கள மக்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை. வரலாற்றின் இன்றைய தினத்தில் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்கும் மிகபெரிய நெருக்கம் ஒன்று உள்ளது. அது, இந்த ஒப்பந்தத்தால் நிலைகுலைந்துபோன பிரபாகரன், 1987-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் நாள் சுதுமலை எனும் இடத்தில் பிரமாண்ட மக்கள் வெள்ளத்தில் இதுகுறித்து உரையாற்றினார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆற்றிய உணர்வுப்பூர்வமான உரை இதுதான்..

“எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே...

இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவதுபோல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல இந்தத் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவுகள் நமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதியாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் - இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்போது அவசர அவசரமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் டெல்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. பாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன... பல கேள்விக்குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பதைப் பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெள்ளத்தெளிவாக விளக்கினோம். ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது.
இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சர்யப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்னையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது, பிரதானமாக இந்திய - இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின்கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகாரச் சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழிவகுக்கிறது. ஆகவேதான், இந்திய அரசு அதிக அக்கறை காட்டியது. ஆனால், அதேசமயம் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனால், நாம் எதிர்த்ததில் அர்த்தமில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்போது நாம் என்ன செய்வது? 
இந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது... எமது அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது... எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது... எமது ஆயுதப் போராட்டத்துக்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனை ஈட்டி, எத்தனையோ உயிர்பலி கொடுத்துக் கட்டி எழுதப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒருசில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. திடீரெனக் கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணியாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம், எமது பிரச்னைகளை மனம்திறந்து பேசினேன்.
சிங்கள் இனவாத அரசின்மீது எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதயும், இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்னை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்குச் சில வாக்குறுதிகள் அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க, இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்தியச் சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.

நாம் எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும் தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்புக்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விடிவுக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்துவந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடம் பெற்றுக்கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது, இந்தப் பொறுப்பு மாற்றத்தைக் குறிக்கிறது. நாம் ஆயுதங்களைக் கையளிக்காதுப் போனால் இந்திய ராணுவத்துடன் மோதும் துர்பாக்ய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரருக்கு எதிராக நாம் ஆயுதங்கள் நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவருடைய உயிருக்கும், பாதுகாப்புக்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு அடித்துக் கூற விரும்புகிறேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள் இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே, தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு. தமிழீழ லட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால், போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால், எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.

தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால், நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.” என்று கூறினார்.

ஓகஸ்ட் 04: ஈழ கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்

பொன். கணேசமூர்த்தி தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர்.
பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் இலங்கை மண், வைகறை ஆகிய தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார்.
விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இன எழுச்சி சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். வரலாறு சொல்லும் பாடம் என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார்.
மண்ணுக்காக என்ற வீடியோ திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார்.  இவர் ஆகஸ்ட் 4, 2006 இல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மார்ச் 15, 2008 இல் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தார்.

யாழ்-கொழும்பு பஸ் அன்னைமுத்துமாரி கிளிநொச்சியில் கோர விபத்து



இன்று அதிகாலை கொழும்பிலிருந்து புறப்பட்டு வந்த அன்னைமுத்துமாரி எனப்படும் பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த பஸ் 140KMPH என்ற வேகத்தில் பயணித்ததாக பின்னால் வந்த வாகன சாரதிகள் தெரிவித்தனர்
பயனிகள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேகத்தை குறைக்காமல் இவர் பஸ்ஸை செலுத்தியதாக கூறப்படுகிறது

இந்த விபத்து இன்று(04.08.2017) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவ்வண்டி பல மின்கம்பங்களை உடைத்துக்கொண்டு கடைசியில் கிளிநொச்சி கல்வி வலயத்துக்கு சொந்தமான கட்டடமொன்றையும் இடித்து நின்றுள்ளது.இதில் பயனித்த பல பயணிகள் படுகாயங்களுடன் இதுவரை எந்த உயிர் சேதமுமற்று தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரயாணங்களின் போது தொலைபேசி பாவனை அதிகரித்து வரும் நாகரீகத்தினாலேயே இவ்வாறான விபத்துகள் இடம்பெறுவதுடன் எத்தனை பயனிகள், பாதசாரிகள் மற்றும் சக பயனிகளில் வாழ்க்கையை சிதைக்கின்றது.
இந்த பஸ்ஸினை கஜன் என்பவர் செலுத்தி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

04-08-2017 இன்றைய ராசிபலன்கள்

04.8.2017 வெள்ளிக்கிழமை ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 19-ம் நாள். வளர்பிறை துவாதசி திதி இரவு மணி 8.20 வரை. பிறகு திரயோதசி. மூல நட்சத்திரம் இரவு மணி 11.04 வரை, பிறகு பூராடம். யோகம்: இரவு மணி 11.04 வரை
அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்.
குளிகை: 7:30 – 9:00
நல்ல நேரம்    6-9, 1-3, 5-6. 8-10
எமகண்டம்      மாலை மணி 3.00-4.30
இராகு காலம்  மதியம் மணி 10.30-12.00
மேஷம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத் தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.
ரிஷபம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றா கவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும்.
வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
மிதுனம்:  
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.
வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
கடகம்:
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்
சிம்மம்:
புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள்.
தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். புதியவர்கள் அறிமுகமாவார் கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
கன்னி:
பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.
நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
துலாம்:
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
விருச்சிகம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபா ரத்தில் போட்டிகள் குறையும். உத்யோ கத்தில் பழைய சிக்கல்கள் தீரும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
தனுசு:  
ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள்.
வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
மகரம்:
விடாப்பிடியாக செயல் பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அசதி, சோர்வு வந்து விலகும்.
தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.
கும்பம்:
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள்.
யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
மீனம்:
சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்