Wednesday, November 15, 2017

இராணுவத் தளபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு!-

இராணுவ தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 1996ம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாவகச்சேரி நாவற்குழி பகுதியில் வைத்து, அப்போதைய நாவற்குழி இராணுவ முகாம் தளபதியான துமிந்த கெப்டி வெலான கைது செய்து சென்ற நபர்கள் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களை மீட்டுத் தருமாறு கோரியும் அவர்களது உறவினர்களால் மூன்று ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாவற்குழி இராணுவ முகாம் தளபதி துமிந்த கெப்டி வெலாவன முதலாம் எதிரியாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இரண்டாம் எதிரியாக இராணுவ தளபதியும், மூன்றாம் எதிரியாக சட்டமா அதிபரும் பெயர் குறிப்பிடப்பட்டு இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனு தொடர்பான விசாரனையானது இன்று (15) யாழ் மேல் நீதிமன்றில் இடம்பெற்றபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம், நகைகள் கொள்ளை !

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம், நகைகளைக் கொள்ளையிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம், நகைகள் கொள்ளை !கோப்புப்படம்
குறித்த நபர் 15 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களையும், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (10.11.2017) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, சந்ததேகநபரை நேற்று, மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

தடம் புரண்டது ரயில்

ரயில் ஒன்று தடம்புரண்டதால், புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான புகையிரத பாதையில் குறித்த ரயில தடம் புரண்டுள்ளது.
நேற்று இரவு 08.45 அளவில் ரஜரட்ட ரெஜின என்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் இன்று (புதன்கிழமை) காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த புகையிரத சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருந்த புகையிரத சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு – கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் புகையிரதங்களும் அனுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.