Sunday, October 8, 2017

சற்றுமுன்.. யாழ்.மானிப்பாயில் இளைஞன் மீது வாள்வெட்டு

யாழ்.மானிப்பாய் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மானிப்பாய் கூழாவடி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.45 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மானிப்பாய் கூழாவடி வீதியில் அண்ணன் தம்பி இருவர் சென்றபோது பின்னால் வந்தவர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த 22 வயதான விஜிதரன் இரண்டு கைகளிலும் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

சுவிஸ் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்றுமுன்தினம் சுவிற்சலாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுகொல்லபட்டுள்ளார்.


புதுக்குடியிருப்பு 6 ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் கரன் (வயது 38) எனப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய குடும்பஸ்தரே சுட்டு கொல்லப்பட்டிருந்தார். இவர் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் பொலிஸாருக்கு முறையிடப்படடுள்ளது. 
 இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாரின் கட்டளைக்கு குறித்த நபர் கீழ்ப்படியாத நிலையில் இவர் மீது துப்பாக்கி சூட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஸ்தலத்திலேயே குறித்த நபர் பலியாகியுள்ளார்.
 கடந்த 2015 ஆம் ஆண்டு தஞ்சம்கோரி சுவிஸ் நாட்டுக்கு சென்ற சுப்ரமணியம் கரன் கடந்த 2 வருடங்களாக சுவிஸ் நாட்டின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்

இயல்பாகவே சாதரண சுபாவத்தை கொண்ட இவர் போரால் மிகவும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்த புதுக்குடியிருப்பில் ஆனந்தபுரம் என்னும் கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். 
இறுதிப்போரில் அனைத்து உடைமைகளையும் இழந்து உறவுகளையும் இழந்து வாழ்ந்த இவர் 2015 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தஞ்சம்கோரி சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் அங்கு வந்த சுவிஸ் நாட்டு பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 
தமது தந்தை இங்கு இருக்கும்போதும் பாரதூரமான எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் என கூறும் இவரது பிள்ளைகள் சுட்டுக்கொல்லும் அளவுக்கு எமது தந்தை எந்த தவறும் செய்திருக்கமாட்டார் என  தெரிவிக்கின்றனர்.
தமது தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை அரசும் சுவிஸ் நாட்டு அரசும் உதவி புரியவேண்டும் என மன்றாட்டமாக கேட்பதாகவும் தமது தந்தைமீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து சுவிஸ் நாட்டு அரசால் நீதியான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்குரிய பதில் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கிலுள்ள புத்தர் சிலைகளை அகற்றுக!

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தர் சிலைகளையும் அகற்றுமாறு “யாழ்ப்பாண அடையாளம்” எனும் அமைப்பு கோரியுள்ளது.
குறித்த சிவில் சமூக அமைப்பினால் சர்வதேசத்தை நோக்கி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையிலேயே புத்தர் சிலைகளை அகற்றும் கோரிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 பக்கங்கள் கொண்ட விரிவான விளக்கங்களுடன் தமது வேண்டுகோளை “யாழ்ப்பாண அடையாளம்” எனும் சிவில் சமூக அமைப்பு முன்வைத்துள்ளது.
மேலும் யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள இராணுவ அதிகாரிகள் வடக்கில் சேவையில் ஈடுபடுவதை தடுப்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமெனவும் குறித்த அமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.