Sunday, August 13, 2017

என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர்: உன்னிகிருஷ்ணன்

என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர் என தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.
யாழில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக திட்டமிட்டிருந்ததது.
இந்நிலையில், தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில் “ எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிசை பாட முடியாது.
பாடகர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று (ஞயிற்றுகிழமை) திருகோணமலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உன்னிகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
இந்திய அரசின் அழைப்பின் பேரில் கடந்த முறை யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த போது, எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லாமல் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்யுமாறு கூறியிருந்தேன்.
அதன்பின்னரே நாம் இங்கு வந்தோம்.
தொடர்ந்து, யாழ்ப்பாண நிகழ்ச்சியின் இறுதியில் பாடல் ஒன்றை பாடி முடித்தவுடன் முன்னாள் அமைச்சர் எனக்கு பொன்னாடை அணிவித்தார். அப்போது அவர் யாரென்று கூட தெரியாத நிலையில் அவரது மரியாதையை நான் ஏற்றுக்கொண்டேன் என குறிப்பிட்டார்.
அதன் பின்னர் தாம் நாடு திரும்பிய வேளை குறித்த விடயத்தினை மேற்கோள்காட்டி பலர் பல வகையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
அத்தோடு இந்த பிரச்சினை ஒருபுறம் இருக்க, வேறு ஒரு இசை நிகழ்ச்சிக்கு கனடாவிற்கு சென்றிருந்த வேளை அங்கும் சிக்கல் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அதனையடுத்து தாம் மன்னிப்பு கேட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நான் ஒரு கலைஞன், நான் இங்கு வந்தது மக்களை சந்தோசப்படுத்துவதற்கு மட்டுமே. ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர் என தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்.

கெட்டுபோகாமல் இருந்த 106 ஆண்டுகால பழமையான கேக்!!

அண்டார்டிகா பகுதியில் 106 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர்.
அண்டார்டிகாவின் கேப் அடேர் பகுதியில் இந்த கேக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ஆய்வுப் பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.
அண்டார்டிகாவின் உள்ள மிக பழமையான கட்டிடத்தில் இருந்து இந்த கேக் கண்டெக்கப்பட்டது.
இந்தப் பழமையான குடிலை நோர்வேவை சேர்ந்த ஆய்வு பயணியான கார்ஸ்டன் போர்ச்க்ரேவிங் மற்றும் அவரது குழுவினர் 1899 ஆம் ஆண்டு கட்டியுள்ளனர்.
பிறகு 1911 ஆம் ஆண்டு தனது டெர்ரா நோவா ஆய்வு பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த குடிலில் தங்கியுள்ளார்.
இந்த கேக் வைப்பட்டிருந்த தகரப் பெட்டி துருப்பிடித்திருந்த போதிலும், கேக் சிறந்த நிலையிலும், உண்பதற்குரிய வாசத்துடனும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள், கடந்த மே 2016 முதல் இந்தக் குடிலில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருவிகள், உடைகள், மோசமாக அழுகிப்போன மீன், இறைச்சி என இதுவரை 1,500 பொருட்களை பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.
பழ கேக் உள்பட கண்டுபிடிக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களும், இருந்த இடத்திலே திரும்ப வைக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் கொடுத்து குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கானுக்கு ஆதித்யநாத்தின் ‘பரிசு’ பணி நீக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் மரணம் அடைவதைத் தடுக்க சொந்தப் பணத்தில் ஆக்சிஜன் வாங்கிக் கொடுத்து குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபீல் கான் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கோரக்பூர் பிஆர்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், 63 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். இதனையடுத்து, குழந்தைகளைக் காப்பாற்ற தனது கார் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை, சொந்த செலவில் வெளியில் இருந்து வாங்கி வந்தார் டாக்டர் கான். இதனால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாவதில் இருந்து பாதுகாக்கப்பட்டனர்.
இதனால் ஏழை எளியப் பெற்றோர்களுக்கு டாக்டர் கானை ஒரு ஹீரோ போல நினைத்துப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், டாக்டர் கபீல் கானை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. காரணங்கள் எதனையும் சொல்லாமல், குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கான் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது உபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உபியில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளதற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று ஆதித்யநாத் கூறியிருந்த நிலையில், ஆக்சிஜன் வாங்கி வந்து குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலம் மீட்பு

ஆற்றின் அணைக்கட்டு ஒன்றில் இருந்து கொலை செய்யப்பட்டுள்ள நபரொருவரின் சடலம் தவாச்சி – தம்பலகொல்லேவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வந்த தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்துள்ள நபரின் கழுத்து பகுதியில் பல காயங்கள் காணப்படுவதாக காவற்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் பாடகர் உன்னிகிருஷ்ணன் நிகழ்ச்சி திடீர் ரத்து! 

இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன்கலந்துகொள்வதாக இருந்த பாடல் நிகழ்ச்சி நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் உன்னிகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது அமைச்சராக இருந்த ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, அவருக்குப் பொன்னாடை போர்த்தினார். அதற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தரப்பிலிருந்து கடுமையாக எதிர்ப்பு வந்தது. அதையடுத்து டக்ளசிடம் பொன்னாடை பெற்றுக்கொண்டதற்காக மன்னிப்பு கேட்பதாக உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதற்கு டக்ளஸ் தேவானந்தா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இந்தியத் தூதரகமும் வட இலங்கை மாகாணசபையின் பண்பாட்டுத் துறையும் அழைத்ததன் பேரில் தான் அந்நிகழ்வில் பங்கேற்றதாகவும் உன்னிகிருஷ்ணன் மன்னிப்பு கேட்டது அவருடைய பிழைப்புக்கானது என்றும் கடுமையான வார்த்தைகளில் பதில் கூறியிருந்தார், டக்ளஸ்.
அதையடுத்து, நேற்று யாழ்ப்பாணத்தில், வெலிங்டன் தியேட்டர் பகுதியில், உன்னிகிருஷ்ணனும் அவரின் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணனும் கலந்துகொள்ளும் ‘இன்னிசை பாடிவரும்’ எனும் நிகழ்வுக்கு ஏற்பாடு நடந்துவந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னையை மனதில்வைத்து, டக்ளசின் ஈ.பி.டி.பி. கட்சியினர், உன்னிகிருஷ்ணனுக்கு அதீதவார்த்தைகளால் பகிரங்க மிரட்டல் விடுத்தனர். யாழ் மக்கள் என்ற பெயரில் சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தது. 
இந்நிலையில் பாடகர் உன்னிகிருஷ்ணனின் நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்தனர்

ஹர்திக் பாண்டியா சாதனை!

ஒரு ஓவரில் 26 ஓட்டங்களை குவித்து, இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை பாண்டியா படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அதிரடி துடுப்பாட்டகாரர் ஹர்திக் பாண்டியா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமார வீசிய ஓவரில், முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு பாண்டியா வீசினார்.
அடுத்து மூன்று பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார், கடைசி பந்தில் ஓட்டங்கள் ஏதும் எடுக்கவில்லை.


பாடகர் உன்னிகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்: யாழில் எதிர்ப்பு!

பிரபல தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் உஉன்னிகிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கு எதிராக அங்கு சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமையை அடுத்து அந்த இசை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிசை பாடமுடியாது என அந்த சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளது.
மேலும், உன்னிகிருஷ்ணன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டியில் உன்னிக்கு எதிர்ப்பு. யாழ். மக்கள் என்று போடப்பட்டுள்ளது.
உன்னிகிருஷ்ணனும், உத்ரா உன்னிகிருஷ்ணனும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.
எனினும் இந்த எதிர்ப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டதை அடுத்து குறித்த இசை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நிதி திரும்புமாயின் வடக்கு முதல்வரே பொறுப்பு!

கடந்த சில மாதங்களாக வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையினால் வடமாகாணத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச்செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அவ்வாறு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்புமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டுமென்று வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படாமல் சில அமைச்சுக்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கிராம மட்ட அமைப்புக்களுக்கு பணமாக வழங்கிய வரலாறும் உண்டு.
இவ்வாறு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான நிதியை அமைப்புகளுக்கு பணமாக வழங்குவது என்று சொன்னால் அதனை சிறுபிள்ளை கூட கட்சிதமாக செய்துமுடிக்கக்கூடிய வலுவுள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்வதென்று சொன்னால் இதற்க்கு படித்த மேதவிகள் வடமாகாண சபைக்கு தேவையில்லை.
ஆகவே கடந்த கால வரலாறுகளில் வடமாகாண சபைக்கு அதன் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் வெளியீடும் அதன் பயன்பாடும் எவ்வாறு இருந்ததென்பதை மக்களும் நன்கு அறிவீர்கள் என நம்புகின்றேன்.
அந்தவகையில் தற்பொழுது காணப்படுகின்ற இவ் அசாதாரண அரசியல் சூழ்நிலைகளை முதலமைச்சர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து ஒரு நேர்த்தியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லவேண்டும்.
குறிப்பாக விவசாய அமைச்சினை முதலமைச்சர் அவர்கள் தன்னகத்தே வைத்திருக்கின்றார்.
ஆனால் தற்பொழுது அவ் அமைச்சில் பல வேலைத்திட்டங்கள் தேங்கிக் கிடப்பதாக அறியமுடிகின்றது.
ஆகவே சம்மந்தப்பட்ட அமைச்சர்களை உரியமுறையில் நியமித்து மிகவிரைவாக அவ்வேலைதிட்டங்களை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தமட்டில் கடந்த மூன்று வருடங்களில் எனது அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு ரூபா நிதிகூட திரும்பிச் செல்லவில்லை என்பதனை எமது மக்கள் நன்கு அறிவீர்கள்.
குறிப்பாக இவ் வெற்றிக்கு முக்கிய காரணம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை அடிமட்டத்துக்கு இறங்கி அதிலிருக்கிற சாதக பதாக விடயங்களையும் இருக்கின்ற பிரச்சனைகளையும் கண்டறியவேண்டும்.
அதனை தீர்ப்பதன் ஊடாகவே முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை சரியாகவும் விரைவாகவும் பிரியோசனமுள்ளதாகவும் செய்துமுடிக்க கூடியதாக இருந்தது.
திட்டங்களை வகுப்பது மட்டுமல்லாது அதனை நடைமுறைப்படுத்துகின்ற போது அடிமட்டத்திற்கு இறங்கி வேலை செய்வதில்தான் அதன் வெற்றி தங்கியிருக்கின்றது.
தற்பொழுது பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் முதலமைச்சர் அவரது வயது உடல்நிலை காரணமாக அடிமட்ட கிராமங்களுக்கு இறங்கி செயற்படுவது என்பது முடியாத காரியம்.
ஆகவே மிக விரைவாக உரிய அமைச்சர்களை நியமித்து மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை சரியாக பயன்படுத்துவதன் மூலமே எமது மக்களின் வாழ்வாதரத்தினை ஓரளவுக்கேனும் உயர்த்த முடியும்.
தூரநோக்கோடு சிந்தித்து முதலமைச்சர் அவர்கள் செயற்படுவார்களாயின் அதனை முழுமனதோடு நான் வரவேற்கின்றேன்.
மேலும் தற்பொழுது ஏற்பட்டிருகின்ற அரசியல் அசாதாரண நிலையினை பயன்படுத்தி பலரும் தங்களது சுயலாப அரசியலை முன்னெடுக்க முனைவதனை முதலமைச்சராகிய தாங்களும் நன்கு அறிவீர்களென நம்புகின்றேன்.
ஆகவே எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலும் அபிவிருத்திகளை துரிதகதியில் கொண்டு செல்வதற்கும் எமது மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்குமான தூரநோக்கோடு சிந்திப்பதற்கு நாம் எல்லோரும் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே பதவி ஆசை மற்றும் சுயநல அரசியலுக்குள் நாம் விழுந்துவிடாது மக்களின் நலனே முக்கியமென செயற்படவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
அதேநேரம் கடந்தகாலங்களில் அதிகாரிகள் உட்பட அனைவரும் நிதி திரும்பிச் செல்லவில்லை என்று நாங்கள் மறுதலித்திருந்தபோதும் அது எமது மாகாணத்திற்கு நிதி வந்து திரும்பிச்செல்வதென்று அர்த்தமில்லை.
குறித்த வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியானது அவ்வருடத்திற்குள் பயன்படுத்தப்படாவிடில் அடுத்த வருடம் ஒதுக்கப்படும் நிதியிலிருந்துதான் குறித்த வேலைத்திட்டத்தினை நிறைவுசெய்ய முடியும்.
அவ்வாறு நிதி கடந்த வருட திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்போது புதிய செயற்த்திட்டங்களை முன்னேடுக்கமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
எனவே குறித்த காலப்பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி அக்காலப்பகுதியிலே பயன்படுத்தப்படுமானால் புதிய திட்டங்கள் வருகின்ற காலங்களில் சாத்தியமாக்கப்படும், நிதி திரும்பிச் செல்லாது என்ற வீண் விவாதங்களை நிறுத்தி யதார்த்தத்தினை புரிந்துகொள்ளவேண்டும்.
குறிப்பாக எமது மாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதி போதாதென்றும் மத்திய அரசு எமக்கு நிதியினை ஒதுக்கித்தருவதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளோம்.
ஆனால் தரப்பட்ட நிதிகள் சரியாக ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? அதனை முற்றுமுழுதாக பயன்படுத்தி இருக்கின்றோமா? என நாமே நமது மனச்சாட்சியை தொட்டு கேட்க கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த கால தவறுகள் எவ்வாறு இருப்பினும் எதிர்காலத்தில் எமது மாகாணத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதற்கு முதலமைச்சராகிய தாங்கள் தீர்க்கமான முடிவை விரைவாக எடுக்கவேண்டும் என்ற அன்பான கோரிக்கையினை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் முன்வைத்துள்ளார்.
மேலும் முதலமைச்சராகிய தங்களைச்சுற்றி ஒரு குள்ளநரிக்கூட்டம் சுயநல அரசியல் இலாபத்திற்காக வட்டமிட்டுக் கொண்டிருகின்றார்கள்.
அவர்களின் சொல்கேட்டு நீங்கள் நடபீர்களேனில் இன்னும் எமது மாகாணம் பல பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.
அத்தோடு ஒரு விடயத்தை சரியாக சிந்தித்து செயர்ப்படுத்த கூடிய அறிவு,ஆற்றல், வல்லமை உடையவர் தாங்கள், அந்தவகையில் எவரதும் சுயநல அரசியல் இலாபத்திக்கும் இடம்கொடுக்காது சரியான விடயங்களை நேர்த்தியாக முன்னெடுப்பீர்களென நம்புவதாக மேலும் தெரிவித்துள்ளார்

ஓகஸ்ட் 13: உலக இடது கை பழக்கமுடையோர் நாள்!

உலக இடதுகை பழக்கமுடையோர் நாள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7 முதல் 10 சதவிதத்தினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணக்கீடப்பட்டுள்ளது.
இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது.
மூளையானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
அவை: பெருமூளை, சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது.
இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

யானைக்கும் அடி சறுக்கும் ! உசைன் போல்ட்டுக்கு நடந்தது என்ன ? தங்கமில்லாது முடிந்தது அத்தியாயம்

உலகின் சிறந்த தடகள வீரரான ஜமைக்காவின் அதிவேக மனிதன் உசைன் போல்ட் தனது இறுதி சர்வதேச போட்டியில் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென கீழே வீழ்ந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலண்டனில் இடம்பெறும் சர்வதேச தடகள சம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட்க்கான இறுதிப் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது, தனது இறுதி 4x100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இறுதியில்  உசைன் போல்ட் ஓடிக் கொண்டிருந்த போது திடீர் என கிழே வீழ்ந்துள்ளார்.
இதன் காரணமாக தனது இறுதிப் போட்டியிலும் தடகள வாழ்வின் இறுதி சர்வதேசப் போட்டியிலும் தங்கம் வெல்ல விரும்பிய உசைன் போல்ட்டின் கனவு இறுதியில் நிறைவேறாமல் போயுள்ளது.
கடந்த காலங்களில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் உலக சாதனை படைத்த உசைன் போல்ட் , 14 உலக சாம்பியன் பதக்கங்களையும், 8 ஒலிம்பிக்க பதக்கத்துடன் தனது சர்வதேச தடகள விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விடை பெற்றார்.

நேபாள வெள்ளப்பெருக்கு: 36 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்சி காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update : இலங்கைக்கு ஆபத்து இல்லை : அனர்த்த முகாமைத்துவ நிலையம்

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில், இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஏற்படக்கூடிய ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், இலங்கையில் சுனாமி ஏற்படக்கூடிய ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது
சுனாமி, குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதற்காக மாத்திரமே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்தார்.
இது தொடர்பான அறிவித்தல்களை ஊடகங்கள் வாயில்களாக மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் இதனால், மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு!

இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியா தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளையே அதிகப்படியாகத் தாக்கியுள்ளது. சுனாமி எச்சரிக்கை இதுவரையில் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. 
இந்தோனேஷியாவின் பெங்குளூ தீவிலிருந்து மேற்கு திசை நோக்கி 73 கி.மீ. தொலைவில் 35 கி.மீ. ஆளத்தில் இந்த வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து இந்தோனேஷியாவின் புவியியல் மற்றும் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறுகையில், ‘இந்த நிலநடுக்கம் சற்று வலிமையானதாகவே தாக்கியுள்ளது. பதாங், மேற்கு சுமத்ரா தீவுகளை அதிகப்படியாக தாக்கியுள்ளது. சுனாமி பயம் இல்லை’ என்றுள்ளார்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரையில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகள் இதுகுறித்து பரிசோதித்து வருகிறார்கள். மக்கள் பலரும் தீவுகளை விட்டு தற்காலிகமாக வெளியேறி வருகின்றனர். முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியத் தீவுகளை வலிமை வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்: ஏழுமலையானின் ஒரு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மக்கள் அதிகளவில் குவிந்தள்ளனர். சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரையில் என தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாகக் காணப்படுகிறது. கூட்டத்தை சமாளிக்க தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மிகவும் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது.
நேற்று, சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகுந்து காண்ப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 93,290 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் தேவஸ்தானத்தில் நேற்று உண்டியல் வசூலும், லட்டு விற்பனையும் அதிகளவில் இருந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பின்படி நேற்று ஒருநாள் மட்டும் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட்டுகளை வாரத்தின் இறுதி நாள்களான சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் நிறுத்திவைத்தது. இந்த நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் மட்டும் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி திவ்ய தரிசன டிக்கெட்டுகள் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் மட்டும் வழங்கப்படும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. விசேஷ நாள்களில் இது மாற்றத்துக்கு உள்ளாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.