சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.
கைதிகளின் நியாயபூர்வமான கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது அரசுக்கு உரிய அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்கள் பின்வருமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியுள்ளனர்
இரா. சம்பந்தன்
கௌரவ எதிர்க்கட்சித் தலைவர்,
தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
கௌரவ எதிர்க்கட்சித் தலைவர்,
தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஐயா,
சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாயபூர்வமான கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது அரசுக்கு உரிய அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.
இதற்காக அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது உரித்துள்ள உறவினர் சார்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகம் முன்பு இன்று செவ்வாய்க்கிழமை (03.10.2017) கவனயீர்ப்பினை மேற்கொள்கின்றோம்.
எமது இக் கவனயீர்ப்பின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உரிய கவனம் எடுத்து அரசியல் கைதிகள் விடயத்தில் செயற்பட வேண்டும் என அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகிய நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
வவுனியா நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட தமது வழக்கினை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக்கூடாது எனவும் தங்களை மரண தண்டனைக் கைதிகளுடன் தடுத்து வைக்கக் கூடாது எனக் கோரியும் எமது உரித்துள்ள உறவினர் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளாகவுள்ள உறவுகளின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் உண்ணாவிரதத்தினால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.
எனவே தாங்கள் உண்ணாவிரதம் இருக்கும் பிள்ளைகள் விடயத்திலும் ஏனைய அரசியல் கைதிகள் விடயத்திலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களிடம் தயவுடன் கோரிக்கை விடுக்கின்றோம்.
எமது உறவுகளின்; வழக்குகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டால் தமிழ் மொழியை மட்டுமே தெரிந்துள்ள அவர்கள் மொழி ரீதியில் சிக்கல்களை எதிர்கொள்வர்.
அடிப்படையில் அரசியல் கைதிகளாகவுள்ள அவர்களது மொழி உரிமையைக் கூட நிலைநாட்டமுடியாது.
மேலும், சிங்களப் பகுதிகளுக்கு வழக்குகள் மாற்றப்பட்டால் அரசியல் கைதிகளாக உள்ள எமது உறவினர் சார்பாக வழக்கறிஞர்களையும் எம்மால் நிறுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே எமது பிள்ளைகளின் வழக்குகள் தமிழ் பிரதேசங்களுக்கு வெளியே உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்படுவது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை மேலும் மேலும் மறுப்பதற்கான அரசின் மனிதாபிமானமற்ற உத்திகள் என்பதனைத் தங்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றோம்.
பல வருடக்கணக்கில் எமது பிள்ளைகள் நீதிக்குப் புறம்பாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சி மாற்றத்தின் வாயிலாக எமது பிள்ளைகளுக்கு விடுதலை கிட்டும் என இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரம் அமைந்திருந்தது.
ஆட்சி மாற்றத்தில் பங்காளிக் கட்சியாக பணியாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மிடம் “மைத்திரியை வெல்ல வையுங்கள்” அதன் வாயிலாக எமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உத்தரவாதம் அளித்தது. இவை எல்லாவற்றினையும் நம்பி வாக்களித்த நாம், எமது பிள்ளைகள் இன்று வரையில் விடுவிக்கப்படாமையினால் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
பதிவிக்கு வந்தவுடன், தெற்கு மக்களின் பிரச்சினைகளை சீக்கிரம்; அணுகிய அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை உரியவாறு அணுகவில்லை.
அவ்வாறு அரசியல் கைதிகளின் மனிதாபிமான விடுதலையில் அரசாங்கம் காட்டிவரும் இழுத்தடிப்புக்கு எதிராக தாங்கள் தாமதமின்றி காத்திரமாக நடவடிக்கையை எடுக்க வேண்டுகின்றோம்.
மேலும், உரியவாறு தொடர்ச்சியான இடைவிடாத அழுத்தத்தினை கூட்டமைப்பின் தலைமைத்துவம் அரசுக்குப் பிரயோகிக்கவும் கோருகின்றோம்.
அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பின் விட்டுக்கொடுப்பு எம்மை வேதனைகு உள்ளாக்குகின்றது.
நாம் வாக்களித்த நீங்கள் எமது பிரச்சினையில் விட்டுக்கொடுப்பின்றி தீர்வைப்பெற்றுத்தாருங்கள்.
ஏற்கனவே எம் சார்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருந்தது. எனினும் நீங்கள் அவற்றுக்கும் பதிலளிக்கவில்லை என அறிகின்றோம்.
எங்களது பிள்ளைகளை விடுவியுங்கள் என்பது ஓர் மனிதாபிமான கோரிக்கை. அதற்காக தாங்கள் உரிய அழுத்தத்தினைப் பிரயோகித்தால் நிச்சயமாக தீர்வு கிட்டும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
எனவே இப்பிரச்சினையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது விடுதலைக்காக ஏங்கும் எமது பிள்ளைகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது பிள்ளைகளின் கோரிக்கையினை உரியவாறு அணுகி உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளான எமது பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்ற தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தயவுடன் தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.