Thursday, August 10, 2017

மலிங்காவை விட வேகமாக பந்து வீச முடியும்: சவால் விடுக்கும் தமிழன்


இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்காவை விட வேகமாக பந்து வீச முடியும் என கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற இளம் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.
தான் சிறு வயது முதல் லசித் மலிங்காவின் பந்து வீச்சினை பார்த்து தான் பந்து வீசி பழகி வந்ததாகவும், தற்போது அவரின் வேகத்திற்கு தன்னால் பந்து வீச முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தான் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் என்றாலும் வறுமையின் நிமிர்த்தம் திறமையை உலகறிய செய்ய முடியாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
விஜயராஜின் திறமையினை அறிந்து கொண்ட வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவருக்கு தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.
இந்நிலையில், விஜயராஜ் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கெட் அணியில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தயாராக இருப்பதாகவும் வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா தெரிவித்துள்ளார்.

சினிமாப் பாணியில் சம்பவம் : வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த கைதி மலசலகூட ஜன்னல் வழியாக தப்பியோட்டம்


சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில், விலங்கிடப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த கைதி ஒருவர் சினிமா பாணியில் அங்கிருந்து தப்பிச் சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இச்சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.
வாரியப்பொல பகுதியைச் சேர்ந்த முதியன்சலாகே பிரியந்த ஜயமகா எனும் கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ள குறித்த கைதி, வைத்தியசாலையில் 20 ஆவது வோர்ட்டில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அந்த வோர்ட்டில் உள்ள கட்டிலில் குறித்த கைதிக்கு விலங்கிடப்பட்டே சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தனக்கு இயற்கை தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியுள்ளதாக கூறி அந்த கைதி வைத்தியசாலை மலசல கூடத்துக்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கோரியுள்ளார். அதன்படி கைதியை மலசல கூடத்துக்கு அழைத்துச் சென்றுள்ள சிறைக் காவலர், மலசல கூடத்தின் வெளியே, உள்ளே சென்ற கைதி வரும் வரை காவலுக்கு நின்றுள்ளார்.
வெகு நேரமாக உள்ளே சென்ற கைதி வெளியில் வராததன் விளைவாக கதவை திறந்து பார்த்த போது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
மலசல கூடத்தில் காற்றோட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள சிறிய ஜன்னலுக்கு அருகே, சுவரின் கல்லொன்றை அகற்றி, அருகில் செல்லும் குழாயின் உதவியுடன் அங்கிருந்து  குறித்த கைதி தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்;ட்டு வரும் வழக்கொன்றில், பிரதிவாதியான குறித்த கைதி, தான் மரணித்துவிட்டதாக போலியாக மரண சான்றிதழ் ஒன்றினை மன்றில் முன்வைத்து அது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் சிறை அதிகாரிகள்  விஷேட விசாரணை  ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

பொலிசார் மீதான வாள்வெட்டு: வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் கைது!!

கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியசாகீத்தியன் மற்றும் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சண்முகராசா சானுஜன் ஆகியோரே நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மடு திருத்தலத்தில் இரு குழந்தைகளின் தாய் மரணம் ; நடந்தது என்ன..?

மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடு தேவாலயப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளம் தாயின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 25 வயது்டைய இரு பிள்ளைகளின் தாயாரான 'திலினி மதுசன்' என தெரிய வந்துள்ளது.
மன்னார் மாவட்டம் மடு திருத்தலத்தில் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடு திருத்தலத்திற்கு  வருகை தந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகனை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.