இலங்கையின் 70 வது சுதந்திரத் தினத்த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசின் தமிழனப் படுகொலைகளை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக சீருடையில் நின்றிருந்த உயர்ஸ்தானிகர் அலுவலக பாதுகாப்பு விவகார இணைப்பதிகாரி தனது வலது கையின் விரலை கழுத்திற்கு குறுக்கே பல தடவைகள் அசைத்து கழுத்தை வெட்டுவதாக சமிக்ஞை செய்துள்ளார்.
இந்த செயலானது தம்மை அச்சுறுத்துவதாக உள்ளது எனக் கூறி சமூக வலைத்தளங்களில் காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக சீருடையில் நின்றிருந்த பாதுகாப்பு விவகார இணைப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து இவ்வாறு நடந்துகொண்ட விதம் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளது.
இவ்வாறு தமிழருக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டி பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜொன்ஸ்டனுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
பிரித்தானியாவின் விருந்தாளியாக உத்தியோகபூர்வ கடமையொன்றில் ஈடுபட்டுள்ள ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அனுமதிக்கவோ முடியாதது.
அது மாத்திரமன்றி இது அச்சுறுத்தும் செயற்பாடு என்று பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் உறுப்பினர்களான ஜோஹான் ரயான்மற்றும் ஷிவோன் மெக்டொனால்ட் ஆகியோரின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.