சட்டவிரோதமான முறையில் வயிற்றில் மறைத்து வைத்து சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை இலங்கைக்கு கடத்திவந்த பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் ஊடாக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சுங்கதிணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 41 வயது மற்றும் 49 வயதான கொழும்பைச் சேர்ந்தவர்களென விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
ஒருவர் இலங்கையின் பிரபல காணி விற்பனை நிறுவனமொன்றின் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது.
துபாயிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 226 விமானத்தினூடாக இவர்கள் கட்டுநாயக்க, பண்டாநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த இருவரையும் சுங்கதிணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினர் சோதனைக்கு உட்படுத்திய போது இருவரும் அணிந்திருந்த ஆடைகளுக்கு உட்புறமாக பெரியளவான இடைப்பட்டி யொன்றை கட்டி அதில் தங்க ஆபரணங்களை 8 பைக்கற்றுகளில் வகைப்படுத்தி மறைத்து வைத்திருந்தமையை அவதானித்தனர்.
இந்த தங்க ஆபரணங்களின் மொத்த நிறை 7 கிலோ 700 கிராம் என சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விமான நிலைய சுங்கப்பணிப்பாளர் ருவன் குமாரவின் உத்தரவுக்கமைய, பிரதி சுங்கப் பணிப்பாளர் கே. எச். ஜி. குமாரசிறியினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.