போரிற்கு பின்னர் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழலாம் என்று எண்ணும் மக்கள் மனதில் மீண்டும் ஒரு குழப்பநிலை உருவாகியுள்ளது.
சமீப காலமாகவே யாழில் ஒருவித பதற்ற நிலை காணப்படுகிறது. போர் காலத்தில் நடமாடியதைப்போன்று படையினரின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளது.
வாள்வெட்டு சம்பவங்கள், பொலிசார் மீதான வாள்வெட்டு, அதிரடி சோதனைகள், திடீர் சுற்றிவளைப்பு, திடீர் துப்பாக்கிப் பிரயோகம் என்று பதற்றமான ஒரு சூழலை யாழ்.குடாநாடு பூசிக்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மக்களைக் கிலி கொள்ளவைத்துள்ளது.
இந்தநிலையில் வடக்கின் பதற்ற நிலைக்கு முன்னாள் போராளிகள் காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பின்னர் இராணுவத்தளபதி அதனை மறுத்திருந்தார். இதுவொருபுறம் இருக்க, தொடர்ச்சியான இந்த அசாதாரண நிலைக்கு ஆவா குழுவினரே காரணம் என்ற கூறப்படுகிறது.
ஆக இவ்வாறான ஒரு நிலையை தோன்றவில்லை..மாறாக தோற்றுவிக்கப்படுகிறது என்பதே நிதர்சனம்.
தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவராமல் அரசு வேடிக்கை பார்க்கிறது. இதற்கு பின்புலம் இன்றி ஒவ்வொரு விடயங்களையும் நகர்த்த முடியுமா என்பது மக்கள் மனதில் எழும் கேள்விகளே..
தொடர்ச்சியான அசாதாரண நிலையினால் இளைஞர்கள் கைது செய்யப்படுவதால் மீண்டும் இளைஞர்களின் பாதையை வேறு திசைக்கு நகர்த்த முற்படுகிறார்களா?
சமூக விரோதிகளை இனங்கண்டு அழித்தொழிக்க வேண்டிய கடப்பாடு அரசிற்கு இருக்கிறது.
அதனை செய்யாது மெத்தனப் போக்கை அரசு கடைப்பிடிக்குமேயானால் மீண்டும் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்களுக்கு உள்ளாவதோடு, படையினருக்கும் சவாலாகவே அமைந்துவிடும்.
இவ்வாறான சம்வங்களைத் தொடர்ந்து படையினரின் அதிகரிப்பு என்பது குடாவில் அதிகரித்துள்ளது..
இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என மூச்சுக்கு முன்னூறு தடவை கொக்கரித்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது இருந்த இடம் தெரியாமல், வாய்மூடி இருக்கின்றனர்.
ஆக எல்லாமே அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் செயற்படுகிறார்களே தவிர தமிழ் மக்கள் மீது கரிசனை இல்லயோ என்று எண்ணத்தோன்றுகிறது.
இதற்கிடையே ஆவா குழு உறுப்பினர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் மற்றும் உதவிகளை வழங்கும் ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். மேலும் விசாரணைகள் தீ விரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
ஆவா குழுவுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வழங்குதல் உள்ளிட்ட பல உதவிகளை செய்வோர் தொடர்பாக இன்டர்போல் உதவியை கேட்க இருப்பதாக பொலிசார் கூறியதாக வடக்கு முதல்வர் கூறியுள்ளார்.
இவ்வாறு சாலையோரம் முளைக்கும் திடீர் செடிகள் போல் நாளுக்கு நாள் புதுப்புது செய்திகள் வெளியாவதால், நாளை என்ன நடக்குமோ என்று கேள்விகள் மட்டுமே எழுகிறது.
அதாவது தமிழ் மக்களை ஆயுதங்களின் நிழலில் வைத்திருக்க வேண்டுமென்று அடிமனதில் வைத்திருக்கும் தந்திரோபாயத்தை கையாள நினைக்கிறது தென்னிலங்கை..
அரசின் தந்திரோபாயங்களை நிறைவேற்றும் விதமாகவே அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துரைக்கிறது.
ஆக தென்னிலங்கை நினைப்பதை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக யாழ் குடாநாட்டின் நிலை அமைகிறது.
இதுவொருபுறம் இருக்க வட மாகாண சபையின் முறுகல் நிலைமையானது நீறு பூத்த நெறுப்பாகவே உள்ளது.
மொத்தத்தில் தமிழ் மக்களின் நிம்மதியை கெடுக்கும் வகையிலேயே செயற்பாடுகள் அமைகிறது.
யாழில் அசாதாரண நிலையை உருவாக்குவது யார்..? அல்லது எதற்காக உருவாக்கப்படுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இல்லையெனில் மீண்டும் தமிழ் மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.