Tuesday, August 22, 2017

வித்தியா வழக்கு – விஜயகலாவின் வாக்குமூலம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குமூல அறிக்கை ஊர்காவற்துறை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடமும் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் சந்தேக நபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க மன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்
கடந்தமுறை நீதிமன்ற உத்தரவிற்கவைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளிடம் பெறப்பட்ட வாக்குமூல அறிக்கைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது
இதையடுத்து சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மன்றில பிணை கோரிக்கையை முன்வைத்தனர்.
வித்யா கொலைச்சம்பவம் இடம்பெற்ற 2015ம் ஆண்டு புங்குடுதீவில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்கு மூலம் பெற இருப்பதுடன் மேலும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அறுவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் பெறப்படவேண்டிய சகல வாக்குமூலங்கள் மற்றும் விசாரணைகளை எதிர்வரும் மாதம் 04ம் திகதிக்குள் நிறைவுசெய்யுமாறு நீதிபதி குற்றப்புலனாய்வினர் மற்றும் அரச சட்ட மா அதிபர் திணைக்களத்தினருக்கு உத்தரவிட்டுள்ளது.
அதுவரை சந்தேகநபரான வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

ரெலோவிற்குள் கடும் குழப்பம்: விக்கி காரணம்?

வட மாகாண சபையில் ரெலோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியினை, ரெலோவின் உத்தியோகபூர்வ பரிந்துரையினை மீறி குணசீலனுக்கு வழங்குவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் செயற்படுவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியமையினைத் தொடர்ந்து ரெலோவிற்குள் கடும் குழப்பம் நிலவுகின்றது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோவின் கொள்கைகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் அப்பால் சென்று வடக்கு மாகாண முதலமைச்சருக்கு நெருக்கடியினை ஏற்படுத்தும் முகமாக முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையொப்பமிட்டிருந்தார்.
மேலும், முதலமைச்சரினால் இரண்டாம் முறை நியமிக்கப்படவிருந்த ஊழல் மற்றும் துஸ்பிரயோகங்கள் சம்பந்தமான விசாரணைக் குழுவிற்கு முகங்கொடுப்பதிலும் மறுப்புத் தெரிவித்துவந்தார்.
இந் நிலையில் முதலமைச்சரின் பணிக்குத் தடையாக இருக்கும் பா. டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அப் பதவிக்கு ரெலோவினால் பரிந்துரைக்கப்படும் வேறு ஒருவரை நியமிக்குமாறு முதலமைச்சரை உத்தியோகபூர்வமாக ரெலோ கேட்டிருந்தது.
அதற்கு முதலமைச்சரும் தாமதங்கள் இன்றி ஆமோதித்து கடிதப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார்.
ரெலோ சார்பான புதிய அமைச்சரை நியமிப்பதில் ரெலோ பல கூட்டங்களைக் கூட்டி ஆராய்ந்திருந்தது.
கடந்த ஜூலை 16 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் அமைச்சராக நியமிக்கப்படக்கூடிய உறுப்பினர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
அதில் தற்போது அமைச்சர் வாரியத்திற்கு நியமிக்கப்படுவதற்கு முதலமைச்சரினால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஊடகங்களின் தெரிவிக்கும் குணசீலனின் பெயர் பின்வரும் குற்றச்சாட்டுக்களின் காரணங்களால் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனினால் முற்றாக நிராகரிக்கப்பட்டது.
வட மாகாண சபை உறுப்பினர் குணசீலன், வட மாகாண சபை உறுப்பினராகப் ரெலோவின் ஊடாக பதவிக்கு வந்தபோதும், அவர் ரெலோவின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியே செயற்பட்டு வந்தார்.
இவர் மன்னார் மாவட்டத்திலும் சரி, ஏனைய மாவட்டங்களிலும் சரி ரெலோவினால் கூட்டப்படும் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை.
கட்சிக் காரியாலயங்களுக்கும் செல்வதும் இல்லை.
இதனையும் ரெலோவின் தலைவரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ‘புதிய அமைச்சராக யாரை நியமிப்பது’ எனக் கூட்டப்பட்ட ரெலோவின் அரசியல் உயர் பீடக் கூட்டத்தில் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், 2013 ஆம் ஆண்டு ரெலோ உறுப்புரிமை படிவத்தினை வழங்கிய போது அதனை நிறப்புவதற்கு குணசீலன் மறுத்திருந்தார்.
அதற்கான காரணமாக, வடக்கு மாகாண சபை தெரிவு செய்யப்பட்டவுடன் தன்னை அமைச்சராக கட்சி நியமிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மன்னார் மாவட்டத்தில் ரெலோ சார்பில் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாகிய குணசீலன் அம் மாவட்டத்தில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் முன்னாள் நகர சபைத் உறுப்பினர் குமரேஸ் என்பவரையே தனது அரசியல் சகாவாக இணைத்துச் செயற்பட்டார்.
குணசீலன் தற்போதும் ஓர் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் போலவே மன்னாரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
குணசீலன் ரெலோ கட்சியையும் ரெலோ உறுப்பினர்களைக் கண்டு கொள்வது கிடையாது.
2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் தமிழர் வாக்குகளே யார் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிக்கப் போகின்றது என்பது எதிர்வு கூறப்பட்டது.
இந்நிலையில் வடக்கு மக்கள் மகிந்தவிற்கு வாக்களிக்க மாட்டர் என்பதை மகிந்த தரப்பு முற்கூட்டியே உணர்ந்திருந்தது.
எனவே வட மாகாணத்திலுள்ள கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர் எவரையேனும் பயன்படுத்தி மைத்திரிக்குச் செல்லும் வாக்கினை குறைப்பதற்கு மகிந்தவின் தொடர்பாளர்கள் பணத்துடன் வடக்கிற்கு படையெடுத்திருந்தனர்.
இவர்கள் வடக்கில் கூட்டமைப்பின் குணசீலன் உள்ளிட்ட நான்கு மாகாண சபை உறுப்பினர்களை அணுகினர்.
அணுகியவர்கள், கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினராகிய நீங்கள் பகீரங்கமாக பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி மகிந்தவிற்கோ மைத்திரிக்கோ தமிழர்கள் வாக்களிகக்கூடாது எனக் கோரவேண்டும்.
அப்படிக்கோரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான உங்கள் கட்சியாலும் உங்களாலும் மகிந்தவிற்கு வடக்கில் அளிக்கப்படுகின்ற வாக்குகளை தடுக்க முடியாது.
ஆனாலும் மைத்திரியை ஆதரித்து நிற்கும் உங்களாலும் உங்கள் கட்சியாலும் மைத்திரிக்கு விழும் வாக்கினைத் தடுக்க முடியும்.
எனவே அதை நீங்கள் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி பகீரங்கப் படுத்தப்படுத்த வேண்டும்.
மாநாடு நடத்திய உடன் உங்கள் நால்வருக்கும் தலா 50 இலட்சம் விகிதம் இரண்டு கோடி வழங்குவோம்.
மகிந்த ஜனாதிபதியாகியவுடன் மிகுதி இரண்டு கோடி ரூபா வழங்குவோம் எனப் பேரம் பேசினர். இதை மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் முற்றாக நிராகரித்தனர்.
ஆனால் குணசீலன் மட்டுமே வவுனியாவில் பகீரங்கமாகப் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி மைத்திரிக்கும் மகிந்தவுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனக் கோரியிருந்தார்.
இவ்விடயம் தேர்தல் காலத்தில் ஊடகங்களிலும் கட்சிகள் மட்டத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்த ஒரு விடயமாகும்.
மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் மோசடி செய்தமை தொடர்பில் குணசீலன் ஏற்கனவே சிக்கலில் மாட்டியிருந்தார்.
ரூபா பத்து இலட்சத்திற்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது என்ற போர்வையில் துவிச்சக்கர வண்டிகள், தையல் இயந்திரம் பேன்றவற்றை கொள்வனவு செய்த குணசீலன் அவற்றினை தன்னுடைய உறவினர்களினதும் அவரது தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றியோரினதும் பெயர்களில் ‘உதவித் திட்டம்’ எனக் கொள்வனவு செய்தார்.
பின்பு அவற்றை அவர்களுக்கு வழங்கி வழங்கியவற்றை மீளச் சேகரித்து மன்னாரிலுள்ள தன்னுடைய உறவினரின் சைக்கிள் கடையொன்றுக்கு விற்றபோது பாதிக்கப்பட்டவர்கள் சம்பவத்தினை வெளிப்படுத்தினர்.
பின்னர் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வடமாகாணத் திணைக்களமும் மாகாண கணக்காய்வுத் திணைக்களமும் கடையில் விற்றபொருட்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது மாகாண சபை உறுப்பினர் மட்டத்திலும் கட்சி மட்டத்திலும் தெரிந்த விடயமாகும்.
குணசீலன் வைத்தியராக (MO) இருந்தபோது முன்னைய வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் திருமதி யூட் ரஜனி அவர்களால் குற்றமிழைத்தமைக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கூறப்பட்ட குற்றங்கள், துஸ்பிரயோகங்களுக்காகவே குணசீலனின் பெயரை ரெலோ அமைச்சுப் பதவிக்காக ஆராயவில்லை.
மிகுதியாக இருக்கின்ற ரெலோவின் வட மாகாண சபை உறுப்பினர்களில் விந்தனுடைய பெயரும் சிவாஜிலிங்கத்தின் பெயரும் கடந்த மாதம் (யூலை16) வவுனியாவில் நடைபெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டு வாக்கெடுக்கப்பட்டது.
இதன்போது ஒன்பது அரசியல் உயர்பீட உறுப்பினர்களில் கலந்துகொண்ட எட்டுப்பேரில், ஐந்து பேர் விந்தன் கனகரட்ணத்தினையும் மிகுதி மூவர் சிவாஜிலிங்கத்திற்கும் வாக்களித்தனர்.
இதன் பிற்பாடு ரெலோவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறீகாந்தா முதலமைச்சருக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டதன் மூலம் ஊடகங்களுக்கு ரெலோ விந்தனை அமைச்சராக்கப் பரிந்துரைப்பது பற்றிய தகவல் வெளியானது.
இதன் பின்னர் இம் மாதம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற ரெலோவின் 21 பேர் கொண்ட தலைமைக் குழுக்கூட்டத்திலும் 14 பேர் கலந்து கொண்டு விந்தனை அமைச்சராக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அம் முடிவும் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரெலோவின் பரிந்துரைகளும் முடிவுகளும் இவ்வாறாக இருக்கையில் முதலமைச்சர் குணசீலனை ரெலோவின் விருப்புக்குப் புறம்பாக அமைச்சராக நியமிக்கின்றமை ரெலோவிற்குள் கடும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது.
இம் மாதம் 05 திகதி கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தீர்ப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் ஏனைய பங்காளிக் காட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் முதலமைச்சரினால் அமைச்சரவை தொடர்பில் பங்காளிக் கட்சிகளின் ஒப்புதலோடும் விருப்பத்தோடுமே அமைச்சர்களின் நியமனம் இடம்பெறும் என முதலமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், பதவியிலிருந்து நீக்கப்படும் அமைச்சர்கள் குற்றமிழைத்தவர்களாகக் கருதப்படமாட்டர் எனவும் எதிர்கால அரசியல் விவகாரங்களை தொடர்ந்து சந்தித்துப்போசு முடிவுகளை எட்டுவது எனவும் முடிவெடுக்கப்பட்டிருந்து.
எனினும் அமைச்சர் விடயத்தில் ரெலோவின் பரிந்துரையினை முதலமைச்சர் புறந்தள்ளிச் செயற்படும் விவகாரமானது கூட்டமைப்பு கட்சிகள் மத்தியிலும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியிலும் சிக்கல்களைத் தோற்றுவித்ததுடன் பெரும் ஏமாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் கலையைக் காக்கும் ஐயா கறுப்பு!


தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக சிலம்பம் விளங்குகிறது.
மன்னார்குடியில் சிலம்பக்கலை வீரர் கறுப்பு என்கிற பாலகிருஷ்ணன், தமிழரின் தற்காப்பு கலையான சிலம்பாட்டத்தை விளையாடிய விதம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்த வயதிலும் அவர் கம்பு மற்றும் சுருள்வாள் சுற்றும் போது மிகவும் கம்பீரமாக காட்சிதருகிறார்.
மறைந்து வரும் வீரத்தமிழர் விளையாட்டுகளை இன்றைய இளம் தலைமுறையினர் பயன்படும் வகையில் எடுத்துரைப்பின் தமிழர்களின் பாரம்பரியங்களை அழியாது காப்பாற்ற இயலும்.

உமாஓயா சுரங்கத்திலிருந்து விஷ திரவம் வெளியேறுகிறது!

உமா ஓயா அபி­வி­ருத்தி திட்­டத்தின் சுரங்­கத்­தி­லி­ருந்து வெளியாகும் விஷம் நிறைந்த திரவ நீரினால் நோய் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை இலங்கை மனித உரிமை கேந்­திர நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
உமா ஓயா அபி­வி­ருத்தி திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் போதும் அத்திட்டத்திற்கு எதி­ராக மக்கள் மத்­தி­யிலும் சிவில் அமைப்புகளிடத்திலும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்­ளன.
உமா ஓயா சுரங்க நீர் விநி­யோக திட்­டத்தின் ஊடாக பண்­டா­ர­வளை உள்­ளிட்ட பதுளை மாவட்ட எல்­லை­களில் உள்ள வீடு­களில் வெடிப்பும் கிண­று­களில் நீர் வற்றும் நிலையும் ஏற்­பட்­டுள்­ளன.
இந்த விடயம் தொடர்­பாக அர­சாங்க மட்­டத்தில் அவ­தானம் செலுத்தப்­பட்டு அமைச்சரவை உப குழுவும் நிய­மிக்­கப்­பட்­டது.
அது மாத்­தி­ர­மின்றி, குறித்த உப குழு­வினால் உமா ஓயா திட்­டத்­தினால் சேத­ம­டைந்த வீடு­க­ளுக்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் நிவா­ரணம் வழங்க அர­சாங்கம் முன்­வந்­தது.
இந்­நி­லையில், நேற்­றைய தினம் உமா ஓயா திட்­டத்தின் சுரங்க பாதையின் ஊடாக கதரகொல்­ல­வி­லி­ருந்து மொன­ரா­கலை பகுதிகளுக்கு விஷ­மிக்க திரவ நீர் வெளி­யாகி வரு­கின்­றது.
இந்தத் திரவ நீர் வெளி­யேற்­றத்­துடன் மேல­திக போத்தல் துண்­டுகள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் இர­சா­னய திரவ பதார்த்­தங்கள் வெளியாகி வரு­கின்­றன.

படுகொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு புதிய வீடு!

 பொலிசாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் குடும்பத்திற்கு புதிய வீடு அமைத்துக் கொடுப்பதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகை தந்த மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
மீள்குடியேற்ற அமைச்சினால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கலை சுலக்சனின் தாயாரால் நாட்டி வைக்கப்பட்டது.


அடுப்பில் விழுந்த பச்சிளம் குழந்தை!!

பொகவந்தலாவ, குயினா தோட்டத்தில் அடுப்பில் தவறி விழுந்த  இரண்டு மாத குழந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயாரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொகவந்தலாவ பொலிஸார் கண்டி வைத்தியசாலைக்கு இன்று விஜயம் செய்துள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில், குழந்தை அடுப்பில் தவறி விழுந்ததாக குழந்தையின் தாயார் கூறியுள்ளார்.
எனவே பாரிய தீக்காயங்களுடன் அக்குழந்தை பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில் அனுஷா குமாரி என்ற இரண்டு மாத குழந்தை பாரிய தீக்காயங்களுக்குள்ளான நிலையில் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரணையே மேற்கொண்ட பொலிஸார், வீட்டின் சமையலறை பகுதியில், குழந்தை உறங்குவதற்கு கட்டப்பட்ட தொட்டிலுக்கு கீழாக கவிழ்ந்து கிடந்த நிலையில் குப்பி லாம்பு ஒன்றை மீட்டுள்ளனர்.
காற்றினால் அசைந்த தொட்டிலில் குப்பி லாம்பின் தீ பரவியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், குழந்தைக்கு ஏற்பட்ட இந்த அவல நிலை குறித்து மேலதிக விசாரணையை தாயாரிடம் மேற்கொள்ள பொகவந்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் கண்டி வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படைத் தளபதியின் புதிய நியமனம்: நாட்டிற்கு அச்சுறுத்தல்!

இலங்கைக்கான தூதரகத்தில் பணியாற்றிய ஒருவர் இலங்கையின் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமென தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவரும் பரா­ளு­மன்ற உறுப்பினருமான விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார்.
ஐக்­கிய அமெ­ரிக்­கா­விற்கு திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை நட­வ­டிக்­கை­களை மேற்கொள்ள வேண்டும் என்­பது நீண்­டநாள் கன­வாக உள்ளது.
எனவே ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரகத்தில் பணியாற்றிய ஒருவர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
தேசிய சுதந்­திர முன்­ன­ணி விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­­து.
புதிய கடற்­படை தள­ப­தியின் இனம் தொடர்பில் எமக்கு பிரச்­சி­னைகள் எதுவும் இல்லை. கடற்­படை என்று வரு­கின்ற போது அவரின் இனத்தை முக்­கி­ய­மாக பார்க்க வேண்­டிய அவ­சியம் இல்லை.
அதே­நேரம் மேற்­கு­றிப்­பிட்ட அதி­காரி யுத்­த­கா­லத்தின் பின்னர் கடற்படை­யி­லி­ருந்து சட்ட­பூர்­வ­மா­கவே விலகிச் சென்­றவர்.
அதன் பின்னர் ஐக்­கிய நாடு­களின் இலங்­கை­க்கான தூத­ர­கத்தில் 4 வரு­டங்கள் பாதுகாப்பு ஆலோ­ச­க­ராக கட­மை­யாற்­றினார். அதனால் அவ­ருக்கு ஐக்­கிய நாடு­களின் அரச திணைக்­க­ளத்­தினால் தான் சம்­பளம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
ஆனால் 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் இடம்­பெற்ற பின்னர் கடந்த அரசாங்கத்தினால் அர­சியல் பழி­வாங்­க­லுக்கு ஆளா­ன­தாக கூறி கடற்படை­யி­லி­ருந்து விலகிச் சென்­றி­ருந்த நிலை­யி­லேயே இவர் தற்போது மீண்டும் கடற்­படை தள­ப­தி­யாக நல்­லாட்சி அரசாங்கத்தினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
அதேபோல் அவர் நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் மீண்டும் கடற்படைக்கு அழைக்­கப்­பட்ட போது கிழக்கு மாகா­ணத்­திற்­கான கட்டளை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.
அதிலிருந்த தற்­போது கடற்­படை தள­ப­தியாக தர­மு­யர்த்­தப்­பட்­டுள்ளார் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

குடும்பஸ்தர் மீது சராமரியான வாள்வெட்டு: வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் மீது சராமரியாக வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வாள்களுடன் வந்த குழுவொன்று நேற்று (21) இரவு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
குருமன்காடு – காளி கோவில் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்குள் புகுந்த வாள்வெட்டு குழு, குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டிவிட்டு, அத்துடன்  மோட்டார் சைக்கிள் ஒன்றையும் முற்றாக சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
சம்பவத்தில் வீட்டு உரிமையாளரான கண்ணா என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் வவுனியா – தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த குழு என்று தெரிவிக்கப்படுவதுடன், குடும்பத் தகராறு ஒன்றுக்காக பழி வாங்கும் நோக்கில் இதனை செய்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் தீ விபத்து


மட்டக்களப்பு – திருப்பெரும்துறை குப்பை மேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தீ பரவலை கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவலை வழங்கியுள்ளனர்.
 இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த குப்பைமேட்டில் ஏற்கனவே ஒரு தடவை தீவிபத்து ஏற்பட்டு பூரணமாக அணைக்க இருவாரம் சென்றமை குறிப்பிடத்தக்கது.

ஓகஸ்ட் 22: சென்னை தினம் கொண்டாட்டம் தொடங்கிய நாள்!

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும்.
இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது.
பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.
முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருகோணமலை பகுதியில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

திருகோணமலை மாவட்ட துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பதினெட்டு வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிப்பது,
மனையாவெளிப் பிரதேசம் யாட் அடைவீதியில் வசித்து வந்த இளைஞரே இவ்வாறு 21.08.2017 முற்பகல் 11 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அத்தோடு அவரின் தாயார்,
காலையில் மகன் வேலைக்கு செல்லாததால் தான் முரண்பட்டுக் கொண்டதாகவும், பின்னர் கோயிலுக்கு சென்று திரும்பி வந்த போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதாகவும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
அவரது நண்பர்களை விசாரித்த போது,
10.00 மணி தொடக்கம் 10.30 வரையிலான காலப்பகுதில் தற்கொலை செய்து கொண்ட நபர், அவசரமாக தொலைபேசி மீள்நிரப்பு அட்டை ஒன்றை கொள்வனவு செய்து போனதாக தெரிவித்தனர்.
அத்தோடு ,
உயிரிழந்தவரின் தொலைபேசி லொக் செய்யப்பட்டிருப்பதனால் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.