Sunday, September 10, 2017

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவத் தயாராகும் அரசு!

தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக சுமார் 6 லட்சம் டொலர் நிதியை விக்டோரியா மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாம்களிலிருந்து உடல் நலமின்மை காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு 400 புகலிடக் கோரிக்கையாளர்கள் அழைத்துவரப்பட்டனர்.
அவர்களுக்கு நிதியுதவி மற்றும் தங்குமிட வசதிகளை அண்மையில் அரசு நிறுத்தியிருந்ததோடு, மேலும் இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கான ஆயத்தவேலைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அரசு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
இதேவேளை விக்டோரியாவில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் ஏனைய வாழ்வாதார உதவிகளுக்காக 6 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கியுள்ளதாக விக்டோரியா மாநில முதல்வர் Daniel Andrews அறிவித்துள்ளார்.
மேலும் அவுஸ்திரேலிய அரசால் நிதியுதவி நிறுத்தப்பட்ட 400 புகலிடக்கோரிக்கையாளர்களும் இன்னும் 6 மாதங்களில் நாடு கடத்தப்படலாம்..அல்லது நிர்பந்திக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 மம்மிகள் கண்டெடுப்பு.

எகிப்த் தலைநகர் கெய்ரோவில் இருந்து 400 கி.மீ தொலைவில் நைல் நதியின் கரையில் லுசார் நகரத்தில் அமெனம்காத் என்பவரின் பிரமீடு உள்ளது.
அந்த பிரமீடுக்களுள் இருந்து மூன்று மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களின் மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மம்மிக்கள் 50 வயது நிரம்பிய பெண் என்றும், மற்ற இரண்டும் அவரது 20 மற்றும் 30 வயது மகன்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய் எலும்புருக்கி நோயினாலும், மகன்கள் வேறு நோயினாலும் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் கி.மு.11 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கூற்றும் நிலவுகிறது.

2 பேரின் உயிரைப் பறித்த மைத்திரியின் சகோதரர்……தண்டிக்கப்படுவாரா?

மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவவில்  விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தமையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவ- ஹிங்குராகொட வீதியில் எதுமல்பிட்டிய என்ற இடத்தில் நேற்று பிற்பகல் 1.10 மணியளவில், லால் சிறிசேன ஓட்டிச் சென்ற லான்ட் குரூசர் வாகனம், உந்துருளி ஒன்றை மோதித் தள்ளியது.
இந்த விபத்தில் உந்துருளியில் பயணம் செய்த சகோதரர்களான இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் சம்பவ இடத்தை விட்டு தப்பிச்சென்ற மைத்திரியின் சகோதரர் சில மணிநேரம் கழித்து காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, அவரை பொலன்னறுவ பதில் நீதிவான் முன் நிறுத்தியபோது, அவரை செப்ரெம்பர் 11ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பேருந்தும் அரச பேருந்தும் மோதி விபத்து

யாழ். கல்லுண்டாய் கல்லுண்டாய் வீதியில் அராலிப் பாலத்துக்கு அண்மையாக அரச பேருந்து ஒன்றும், தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
அதில் அரச பேருந்தில் பயணித்த ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். மற்றும் சிலர் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனர்.
அராலியூடாக சித்தன்கேணி செல்லும் பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டும் பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என மக்கள் தெரிவித்தனர்.