Wednesday, August 2, 2017

இந்தியாவில் 30 ஆண்டுகளில் 59 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் அதிக வெப்பநிலை, குறைந்த மழை அளவு போன்ற தட்ப வெப்பநிலை மாற்றத்தால் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை கூறுகிறது.  இந்தியர்களை கலங்கடிக்கும் இந்த ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகம்  நடத்தியுள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் தெற்குப் பகுதியில் இந்த தற்கொலைகளும், காலநிலை மாற்றமும் நடந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இந்த ஆய்வில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காலநிலை மாற்றத்தால் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவசாய உற்பத்தி அதிகளவில் நடக்கும் காலங்களில் வெப்பநிலை அதிகரிப்பு, மழை இல்லாமல் போனதால் ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

"மனித உயிர்கள் பெரிதா... போலீஸ் வாகனம் பெரிதா?'' - முதல்வருக்கு கதிராமங்கலம் பள்ளி மாணவி கேள்வி


''மனித உயிர்கள் பெரிசா, போலீஸ் வாகனங்கள் பெரிசா?'' எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி கம்பீரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார் கதிராமங்கலத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி. 
திராமங்கலம் கிராமத்தில் போராடிவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அந்தக் கிராமத்துக்கு வந்திருந்தார், தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின். அப்போது, அங்கே இருந்த பள்ளி மாணவியான மதுமிதா, ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். 'ஒஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து 74-வது நாளாகப் போராடிவருகிறோம். அந்த நிறுவனத்தால் எங்கள் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எங்கள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. இதற்குத் தீர்வுகாண வேண்டும்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்த ஸ்டாலின், மதுமிதாவை மேடைக்கு அழைத்துப் பேச சொன்னார். 

மைக்கைப் பிடித்த மதுமிதா, கணீர் குரலில் முழங்கினார். அவரின் பேச்சும் தைரியமும் கூட்டத்துக்கு வந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ''கதிராங்கலத்தில் போராட்டத்தின்போது, காவல் துறையின் இரண்டு ஜீப்களை அடித்து நொறுக்கிவிட்டார்கள். ஒரு மோட்டார் பைக்கை கொளுத்திவிட்டார்கள் என்று முதல்வர் எடப்பாடி சொல்கிறார். அதெல்லாம் பொய்யான தகவல். போலீஸ்காரவங்க அடிச்சதில் எங்கள் ஊரைச் சேர்ந்த இரண்டுப் பெண்களுக்குத்தான் கர்ப்பப்பை இறங்கிப்போச்சு. இன்னொருத்தருக்குக் கால் முறிஞ்சுப்போச்சு. இது எப்படி முதல்வர் எடப்பாடிக்கு தெரியாமல் போச்சு? கதிராமங்கலத்தில் என்ன நடக்கிறது என்றுகூடத் தெரியாமல் ஒரு முதல்வர் இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முதல்வர் பேசுவது நியாயமா? மனித உயிர்கள் பெருசா... போலீஸ் வாகனங்கள் பெரிசா? 
ஓஎன்ஜிசியை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த நான்கு பேர் கும்பகோணம் மருத்துவமனையிலும் ஒருவர் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எங்கள் கிராமத்தில் எண்ணெய் எடுக்க வேண்டாம். கடலிலோ, பாலைவனத்திலோ போய் எடுங்கள் என்றுதானே சொல்கிறோம். பள்ளிக்கூடம் படிச்சுட்டிருந்த பையன் ஒருத்தன் திடீர்ன்னு மயக்கம் அடிச்சு விழுந்துட்டான். டாக்டர்கிட்ட டிரீட்மென்ட்டுக்கு கூட்டிட்டுப்போனால், தண்ணீரில் பிரச்னை இருக்கு, நல்ல தண்ணீரை பயன்படுத்துங்கன்னு சொல்றார். ஒன்பது வயசாகும் அந்த பையனை 21 வயசு வரைக்கும் மாத்திரைச் சாப்பிடணும்னு சொல்லிட்டார். அவன் இதயமும் பாதிச்சிருக்கு. . இதெல்லாம் முதல்வர் கண்ணுக்குத் தெரியலையா? இங்கே இருக்கிற அதிகாரிகள் கண்ணுக்காவது தெரியுமா?'' என்று சரமாரியாக கேள்வி எழுப்புகிறார் மதுமிதா. 
அடுத்துப் பேசிய போராட்டக் குழு உறுப்பினர் கலையரசி, ''ஒவ்வொரு நாளும் நாங்க போராடிட்டிருக்கோம். இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கலை. எங்க குழந்தைகள் பெரிய படிப்பு படிச்சு, லட்சம் லட்சமா சம்பாதிச்சுக் கொடுக்கணும் என்றெல்லாம் எங்களுக்கு ஆசை கிடையாது. எங்க பிள்ளைங்க ஆரோக்கியமாக வாழணும், நிம்மதியா இருக்கணும். இனிமே பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கணும் என்றுதான் விரும்பறோம். அதுக்குகூட எங்களுக்கு உரிமை இல்லையா? ஆயிலும் அமிலமும் கலந்துதான் எங்க வீட்டுக் குழாயில் தண்ணீர் வருது. ஒவ்வொரு நாளும் அந்த விஷத் தண்ணீரைத்தான் எங்க பிள்ளைங்களுக்கு கொடுத்திட்டிருக்கோம். நினைச்சாலே மனசெல்லாம் கொதிக்குதுங்க. உண்ணாவிரதம் இருந்த ஒருத்தர் இப்போ ரத்த வாந்தி எடுத்திருக்கிறார். அப்படி நாங்க என்னங்க தப்பு செஞ்சுட்டிருக்கோம்? எங்களை இந்த மண்ணைவிட்டே துரத்தணும்னு மத்திய அரசும் மாநில அரசும் நினைக்குது. விவசாயிகளையும் விவசாயத்தையும் ஏன் இப்படி கேவலப்படுத்தறீங்க? விவசாயிகள் இளிச்சவாயர்களா? நாங்க வாழ்ந்தாலும் செத்தாலும் அது இந்த மண்ணுலதான் நடக்கும். எங்கள் போராட்டத்தை விடமாட்டோம்'' என்றார் ஆவேசமாக. 

இந்தப் போராட்டக் குரல்களுக்கு என்று தீர்வு கிடைக்குமோ?

நாளைய போட்டியில் இலங்கை சாதிக்குமா?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (வியாழக்கிழமை) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இந்திய அணிக்கு விராட் கோலியும் தலைமை தாங்கவுள்ளனர்.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
சொந்த மைதானத்தில் இலங்கை அணி தோல்வியடைந்திருப்பதால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
எனவே இப்போட்டியில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இலங்கை உண்டு.
ஆகவே நாளைய போட்டிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

யாழில் அதிரடிப்படையினரின் அதிரடி!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அசாதாரண நிலை தற்போது நிலவி வருகின்றது. இதனைத் தொடர்ந்து குடாநாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த நாட்களில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் காலை நேரத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் நாள் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை வழங்குவதற்காக பொலிஸ் அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ் குடா நாடு, வலிகாமம், வடமராட்சி ஆகிய மூன்று பிரதேசங்களுக்கும் பிரித்து ஒதுக்கி அந்த பிரதேசங்களுக்கு விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸ்தரப்பில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன

சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்..!!


சமுர்த்தி பயனாளிகளின் போராட்டம் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உறுதி மொழியினால் கைவிடப்பட்டது…
காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் சமுர்த்தி பயனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதோடு பிரதேச செயலகத்தை இயங்க விடாது கதவினையும் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பிரதேச செயலரையும் செயலகத்திற்கும் செல்லவிடாதவாறு போராட்டக்காரர்கள் தடுத்திருந்தனர்.
அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவ்விடத்திற்கு விஐயம் மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் பயனாளிகளுடன் ஒரு கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்திருந்தார்….
சமுர்த்தி அமைச்சர் எஸ் பி திசாநாயக்கவுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்று தருவதாக அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் உறுதியளித்ததை அடுத்து சமுர்த்தி பயனாளிகளின் போராட்டம் கைவிடப்பட்டது..
கடந்த 10 வருடங்களாக சமுர்த்தி நிவாரணம் பெற்று வந்த காரை நகர் பகுதி மக்கள் காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் மூன்று மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற சமுர்த்தி மீளாய்வின் போது தாம் புறக்கணிக்கப்பட்டதாகவும் தமக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து காரை நகர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது..

யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் குற்றச் செயலில் ஈடுபடுகின்றனர்!!

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதேபோல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
இராணுவத்தை வெளியேற்றவேண்டும் என்ற கொள்கையை நாம் கொண்டிருப்பதால் எது நடந்தாலும் இராணுவத்தின் ஒத்துழைப்பை கேட்க கூடாது என அது அர்த்தப்படாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர முப்படையினரும் களத்தில் இறக்கப்படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஐயசுந்தர யாழில் கூறியிருந்தார்.
இந்த கருத்து தொடர்பாக கேட்ட போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
முப்படையினரையும் களமிறக்கப்போவதாக பொலிஸ் மா அதிபர் கூறவில்லை. பொலிசாருக்கு உதவியாக இராணுவத்தையும், வேண்டுமெனில் மக்கள் விருப்பப்பட்டால் களமிறக்கவிருப்பதாகக் கூறினார்.
அவர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்களையும் தந்துவைத்தார். யார் வேண்டுமானாலும் குற்றச்செயல்கள் பற்றி தமக்கு முறைப்பாடு செய்யலாம் என்றார்.
வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை நான் இப்பொழுதும் கோருகின்றேன். ஆனால் குற்றங்கள் நடைபெறும் பொழுது அவற்றைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும்.
நேற்றைய தினம் நான் கூட்டத்தில் பேசும்போது பொலிஸ்மா அதிபருக்கு பின்வருமாறு கூறியிருந்தேன் –
‘இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதே போல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது.
குற்றச் செயல்கள் எங்கு நடைபெற்றாலும் எமது எல்லா வளங்களையும் உள்ளேற்று அவற்றைத் தடுக்கவோ உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ வேண்டும்.’
எனவே இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஒருவர் எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரக்கூடாது என்று அதற்கு அர்த்தமில்லை.
அப்படியானால் எது நடந்தாலும் நாங்கள் சும்மா இருக்க வேண்டும் என்று பொருள்படும்.
மேலும் இராணுவத்தை அவசரத்திற்கும் அழைக்க கூடாது அவர்கள் களமிறக்கப்படுவதை எதிர்க்கவேண்டும் என கேட்பவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானவர்களாகவே இருப்பர் என்றார்.

முல்லைத்தீவில் கொட்டித்தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் மழை பெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை உள்ளிட்ட பிரதேசங்களிலே நேற்று மழை பெய்துள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த தொடர் வறட்சி காரணமாக முல்லைத்தீவு பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்ததுடன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த நிலையில் மழை பெய்துள்ளமையானது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

13 ஆம் திருத்­தத்தை மஹிந்த ஏன் ரத்துச் செய்­ய­வில்லை?

இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­தைப்­போன்று அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் காட்­டிக்­கொ­டுப்பு என்றால் மஹிந்த ராஜபக் ஷ 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை ஏன் நீக்­க­வில்லை என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அலு­வல்கள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பினார்.
ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது துறை­முக ஒப்­பந்­த­மா­னது இந்­திய இலங்கை ஒப்­பந்தம் போன்­ற­தொரு காட்­டிக்­கொ­டுப்பு என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருப்­பது தொடர்­பாக ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால் வின­வி­ய­தற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீன நிறு­வ­னத்­துக்கு வழங்க அர­சாங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யா­னது இலங்கை இந்­திய ஒப்­பந்­தம்­போன்று காட்­டிக்­கொ­டுப்­பாகும் என மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருந்தார். அப்­ப­டி­யாயின் அவர் நாட்டில் ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­தி­னூ­டாக ஏற்­ப­டுத்­தப்­பட்ட 13ஆவது திருத்­தத்தை ரத்­துச்­செய்­தி­ருக்­கலாம். அவர் ஏன் செய்­ய­வில்லை. அத்­துடன் அவ­ருக்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இருக்­கும்­போது இதனை ரத்­துச்­செய்­தி­ருக்­கலாம். ஆனால் அவர் செய்­ய­வில்லை. 
9 மாகா­ண­ ச­பை­களில் 7மாகா­ணங்­களில்  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி முத­ல­மைச்­சர்­களே இருக்­கின்­றனர். 88ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மாகா­ண­ச­பையில் போட்­டி­யி­டா­விட்­டாலும் அதன் பின்னர் போட்­டி­யிட்­டது. 13ஆவது திருத்­தத்தை நீக்­கு­வ­தற்கு அதி­காரம் இருந்தும் அவர் அத­னை­செய்­யாமல் இன்று நாங்கள் காட்­டிக்­கொ­டுத்­த­தாக தெரி­விக்­கின்றார்.
அத்­துடன் மஹிந்த ராஜபக் ஷ இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டும்­போது 13ஆவது திருத்தம் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அப்­போது 13க்கு அப்பால் சென்று  நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார். இந்த தக­வலை இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் லோக் சபையில் தெரி­வித்தார். இந்த செய்தி ஊட­கங்­களில் வெளி­வந்­த­வுடன் பர­வ­லாக பேசப்­பட்டு வந்­தது. அப்­போது அவரின் ஊட­கப்­பி­ரிவு ஜனா­தி­பதி இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­ச­ருக்கு அவ்­வாறு தெரி­விக்
க­வில்லை என அறிக்கை வெளி­யிட்­டது. இதனால் இந்­திய இலங்கை நாடு­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­ற­வுக்கும் பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்­தது. எனவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆவதுதிருத்தச்சட்டத்தை ரத்துச்செய்வதற்கு அதிகா ரம் இருந்தும் அதனை செய்யாமல் தற்போது அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் போன்று காட் டிக்கொடுப்பு என தெரிவிப்பதில் நியாயம் இல்லை என்றார்.

இலங்கை வந்த வெளிநாட்டவர் விமான நிலையத்தில் உயிரிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடு நாடொன்றிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர், இன்று (புதன்கிழமை) காலை 6 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-282 என்ற விமானத்தில் குறித்த நபர் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.20 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளார்.
அதன்பின்னரே அவர் உயிரிழந்துள்ளார். எனினும் அவருடைய மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயில் ஜூலை மாத உண்டியல் வசூல் ரூ.1.43 கோடி

றுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை மாத உண்டியல் வசூல், ரூ.1 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 124 ரூபாய் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில், ஒவ்வொரு மாதமும் இரு முறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.  ஜூலை மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி, திருக்கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதி தலைமையில் நடந்தது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த முருக பக்தர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய உண்டியல் எண்ணும் பணி, இரவு வரை தொடர்ந்தது.

 இதில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 1 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 124 ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளது. இதில்,188 வெளிநாட்டு கரன்சிகளும்  855 கிராம் தங்கமும், 15 ஆயிரத்து 400 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளன. 

ஓகஸ்ட் 02: ஹிட்லர் ஜேர்மனியின் அதிபரான நாள்!!

காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 1889 ஆம் ஆண்டும் ஏப்ரல் 20 ஆம் திகதி அலாய்ஸ் ஹிட்லர்- கிளாரா போல்சுக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார்.
இவருடன் பிறந்த நான்கு பேர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் ஹிட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான்.
அவர் 1933-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார்.
பின்பு 1934-ம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார்.
ஜெர்மனி நாட்டின் பியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது.
அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வடக்கின் புதிய உறுப்பினராக ஆர்.ஜெயசேகரம் இன்று பதவியேற்பு!!

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஆர்.ஜெயசேகரம் இன்று பதவியேற்கவுள்ளார்.
மாகாண சபையின் சழற்சி முறையான தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்த மயூரன் கடந்தவாரம் பதவி விலகியிருந்தார்.
இந்நிலையிலையே சபையின் புதிய உறுப்பினராக ஜெயசேகரம் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய இன்று மாலை நான்கு மணிக்கு யாழ் வர்த்தக சங்கத்தில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ முகாம்களை அகற்ற முடியாது: அமைச்சர்

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மிகப்பெரும் ‘பயங்கரவாத அமைப்புடன் 30 ஆண்டுகள் யுத்தம் செய்து வெற்றிகொண்டுள்ளோம்.
தற்போது நாட்டை ஒருமித்த நாடாக பயணிக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு செல்கின்றோம். இவ்வாறான நிலையில் இந்த இடத்திலிருந்து எம்மால் நீங்க முடியாது.
அதுமட்டுமின்றி யுத்தத்தின் பின்னர் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சரியான புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இராணுவ முகாம்கள் அங்கு இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

தினம் தினம் திருநாளே! - தினப் பலன் ஆகஸ்ட் - 2

தினப் பலன்
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

மேஷம்:  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகள் வெற்றி அடையும். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.
ரிஷபம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை  ஆபரணங்கள் வாங்குவீர்கள். 
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும்.
மிதுனம்: அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும்  ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும்  பண லாபமும் உண்டாகும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரைச் சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படவும் கூடும். 
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும்.
கடகம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். 
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து வரும்  செய்தி  உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பேச்சிலும் செயலிலும் பொறுமை அவசியம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.
கன்னி:   வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.  
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்: உற்சாகமான நாளாக இருக்கும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகக் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.
விருச்சிகம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். 
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
தனுசு: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச்  சாதகமாக முடியும். இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. 
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.
மகரம்:  இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும், சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் வரும்.  
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கையும் பணலாபமும் கிடைக்கும்.
கும்பம்: உற்சாகமான நாள். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள்  ஏற்படக்கூடும். 
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் சகோதாரர்களால் நன்மை ஏற்படும்.
மீனம்:  புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். 
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.