Saturday, September 16, 2017

பனை மரத்திலிருந்த சடலம்- நடந்தது என்ன?

பனை மரத்திலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பனை ஓலை வெட்ட ஏறியவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக பனைமரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், பனை மரத்தின் வட்டுப் பகுதிக்குச் சென்று அமர்ந்துள்ளார்.
இதனால் பனை மரத்தின் உச்சியிலேயே உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் சடலம் அயலவர்களின் உதவியுடன் கீழே இறக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
பின் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போது உயிர் பிரிந்துள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
44 வயதுடைய கஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவீரர் துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காக்களாக அமைக்கும் திட்டம்!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காக்களாக அமைக்கும் செயற்திட்டத்தினை உரிய பிரதேச சபைகளிடம் கையளிக்க ஆவண செய்ய வேண்டுமென்று மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடிதம் மூலம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாளைமறுதினம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், குறித்த ஆலோசனைகளை உள்ளடக்குமாறும் அவர் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
அந்த கடிதத்தில்,
மாவீரர் 5 விடயங்களை உள்ளடக்குமாறு யாழ்.மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காக்களாக அமைக்கும் செயற்திட்டத்தினை அவை அமைந்துள்ள பிரதேச சபைகளிடம் கையளிக்க ஆவண செய்தல்.
மற்றும் நல்லூர் பின்வீதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபி புனரமைக்கும் செயற்திட்டத்தினை யாழ்.மாநகர சபையிடம் கையளித்தல்,
யாழ்.மாவட்டத்தில் உள்ள தமிழர் வரலாற்றுத் தொல்லியல் ஆதாரங்களை பாதுகாப்பதற்கான செயற்திட்டத்தை முன்வைத்தல்.
யாழ்.நல்லூர் சங்கிலியன் மனையைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டத்தை முன்வைத்தல்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுத்து தூய தமிழில் பெயர் வைத்தல்.
ஆகிய 5 அம்ச ஆலோசனைளைகளை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும் ஆலோசனைகளில் இணைத்துக்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புத் குழு தலைவருக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
அந்த கடிதங்களின் பிரதிகளை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணை தலைவர்களான சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

“தயார் நிலையில் 89 இராணுவக் குழுக்கள்; தேவைப்பட்டால் களமிறங்கும்” - இலங்கை இராணுவம்

மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருக்கும் நிலையில், தேவைப்பட்டால் அல்லது அழைப்பு விடுக்கப்பட்டால், இராணுவ வீரர்களின் உதவியுடன் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கத் தயார் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.
அவ்வாறு உதவி கோரப்படும் பட்சத்தில் அனுப்புவதற்காக இராணுவ வீரர்கள் அடங்கிய 89 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், எந்த வித இடையூறு ஏற்பட்டாலும் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று மின்சார சபை தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
“எமது போராட்டத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக மின்சார சபையில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றவர்களை பணிக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. என்றபோதும், இதுவரை ஓய்வுபெற்ற ஒருவரும் வேலைக்குச் சமுகமளிக்கவில்லை. என்ன நடந்தாலும் உரிய தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டத்தை நாம் நிறுத்தப்போவதில்லை” என்று மின்சார சபை ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் சில பிரதேசங்களில் தமது ஊழியர்கள் நாச வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜெயவர்தன தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்களைத் தாம் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் சீரற்ற காலநிலை; இலங்கையிலும் எதிரொலிக்கும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையால் அடுத்த மூன்று நாட்களுக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தக் காலநிலை தாக்கத்தால் நாட்டின் வடமேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் இன்றும் (16) நாளையும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடும் காற்று வீசக்கூடும். குறிப்பாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதைச் சூழவுள்ள கடற்பகுதியிலும் கடுங்காற்று வீசலாம்.
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புத்தளம் முதல் காங்கேசன்துறை வழியாக திருகோணமலை வரை நீண்டிருக்கும் கரையோரப் பகுதியிலும், அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரையோரப் பகுதியிலும் கடல் கொந்தளிப்பாகக் காணப்படலாம். மேலும் மணிக்கு ஐம்பத்தைந்து முதல் அறுபது கிலோமீற்றர் வேகத்தில் கடுமையான காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

2ம் நாள் யாகம் #தீலிபன்


பதிவு:- நன்றி மு.வே.யோ.

தியாகி லெப்.கேணல் திலீபனின் உண்ணாவிரதம் ;இரண்டாம் நாள்

1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 16ம் திகதி. இது திலீபனுடன் இரண்டாம் நாள். அன்று அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தைவிட்டு எழுந்து விட்டார். முகம் கழுவி தலைவாரிக்கொண்டார். சிறுநீர் கழித்தார் ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோகமாக காணப்பட்டாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

சகல தினசரி பத்திரிகைகளையும் ஒன்று விடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவிலே பக்கத்து மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நிகழ்ச்சிகளுக்கு தேவர் தலைமை தாங்கிக்கொண்டிருந்தார். கவிதைகளை படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். நிதர்சனம் ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமரா நாலா பக்கமும் சுழன்று படம்பிடித்துக் கொண்டிருந்தன.

மேடைகளில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்போது திலீபன் என் காதுக்குள் குசுகுசுத்தார். “நான் பேசப்போகிறேன் மைக்கை வேண்டி தாங்கோ வாஞ்சி அண்ணா.” சாப்பிடாமல் குடிக்காமல் இருக்கிறிங்கள் களைத்து விடுவீர்கள்..என்று அவரை தடுக்க முயன்றேன். ” இரண்டு நிமிடம் மட்டும்.. நிப்பாட்டி விடுவன். ப்ளீஸ் மைக்கை வாங்கித்தாங்கோ ” என்று குரல் தளதளக்க கூறினார். அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது. கண்கள் குழி விழுந்து, முகம் சோர்ந்து காணப்பட்டாலும் அந்த பசுமையான சிரிப்பு மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் மேடையில் நின்ற தேவரிடம் மைக்கை பெற்றுக் கொடுத்தேன். திலீபன் பேசப்போவதை தேவர் ஒலிபெருக்கியில் அறிவித்ததும் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. திலீபன் பேசுகிறார். ” எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நான் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம்.

மில்லர் இறுதியாகப்போகும் போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதி வரை இருந்தேன். “நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது என்பதே ஒரே ஏக்கம் ” என்று கூறிவிட்டு வெடி மருந்து நிரப்பிய லொரியை எடுத்துச்சென்றான். இறந்த 650 பேரும் அனேகமாக எனக்கு தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்க மாட்டேன். உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தலைவரின் அனுமதியை கேட்டபோது அவர் கூறிய வரிகள் என் நினைவில் உள்ளன.

திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன் என்று அவர் கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை தனது உயிரை சிறிதும் மதிக்காத தலைவனை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தினை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தரும். இதனை வானத்தில் இருந்து இறந்த மற்ற போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன்.

நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். விடுதலைப்புலிகள் உயிரினும் மேலான சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கிறார்கள். உண்மையான உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தினை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள் எனது இறுதி விருப்பமும் இதுதான்.”

மிகவும் ஆறுதலாக சோர்வுடன் ஆனால் திடமுடன் பேசிய அவரின் பேச்சைக்கேட்டு மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்றிரவு தலைவர் வந்து திலீபனை பார்த்தார். சோர்வுடன் படுத்திருந்த திலீபனின் தலையை தனது கரங்களால் வருடினார். ஒரு தகப்பனின் அன்பையும் தாயின் பாசத்தையும் ஒன்றாக குழைத்தது போலிருந்தது அந்த வருடல். இரண்டு இமய மலைகளையும் என் கண்கள் விழுங்கிக்கொண்டிருந்தன. இரவு பனிரெண்டு மணிக்கு திலீபன் உறங்கத்தொடங்கினார்.

புலி உறுப்பினர்களின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கம்: வெளியான காரணம்!!

சர்வதேச பொலிசாரால் தேடப்பட்டு வந்த 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கப்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த மற்றும் புலி உறுப்பினர்கள் 50 பேர் உள்ளிட்டட 150 குற்றவாளிகளின் பெயர்கள் அண்மையில் இன்டர்போலால் தேடப்பட்டு வருவோர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பட்டியலில் குறிப்பிடப்பட்டவர்கள் உயிரிழந்தமை ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இன்டர்போல் குறித்த ஊடகத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசு எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

16-09-2017 இன்றைய ராசிபலன்கள்

16-09-2017 சனிக்கிழமை ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 31-ம் நாள். தேய்பிறை ஏகாதசி திதி மாலை மணி 4.53 வரை.
பிறகு துவாதசி திதி. பூச நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு மணி 2.09 வரை, பிறகு ஆயில்யம். யோகம்: மறுநாள் பின்னிரவு மணி 2.09 வரை, சித்தயோகம், பிறகு மரணயோகம்.
நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00
இராகு காலம் காலை மணி 9.00-10.30
குளிகை: 6:00 – 7:30
மேஷம்:
பால்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத் தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால் அனு கூலம் உண்டு.
வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.
மிதுனம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத் தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
கடகம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும்.
சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.
வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
கன்னி
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.
துலாம்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.
விருச்சிகம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பழைய பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
தனுசு
சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.
முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.
மகரம்
சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.
கும்பம்
குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மீனம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.
புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.