புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கில் 1 ஆம் எதிரி மற்றும் 7 ஆம் எதிரிகள் சார்பாக சாட்சியங்கள் எதுவுமில்லை.
2, 3, 4,5,6,8,9 ஆம் எதிரிகளின் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் குமார் ரட்ணம் ரயல் அட்பார் நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார்.
வித்தியாவின் கூட்டுவன்புணர்வு படுகொலை வழக்கின் விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயல் அட் பார் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
விசாரணையின் இறுதியாக சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக ரயல் அட் பார் இன்று (12.09) கூடியது.
முதலில் வழக்குத் தொடுநர் சார்பாக பிரதி சொலிஸ்டர் குமார் ரட்ணம் தனது சமர்பணத்தினை ஆரம்பித்தார்.
புங்குடுதீவு கிராமத்தில் நடந்த குற்றச்செயல் தொடர்பாக சட்டமா அதிபரின் சிபார்சுக்கு அமைவாக பிரதம நீதியரசரினால் ரயல் அட்பார் நியமிக்கப்பட்டது.
அதன் மூலம் மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றது.
குற்றப்பகிர்வு பத்திரத்தில் 9 எதிரிகள் மீது 41 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 43 சாட்சியங்கள், 27 சான்றுப்பொருட்கள் மீதான தொகுப்புரையின் சமர்ப்பணத்தினை மன்றில் ஆற்றினார்.
தொகுப்புரையின் இறுதியில், 1 மற்றும் 7 ஆம் எதிரிகள் மீதான குற்றச்சாட்டின் சாட்சியங்கள் இல்லை என்றும் 2,3,4,5,6, 8 மற்றும் 9 ஆம் எதிரிகளின் மீதான கடத்தல் மற்றும் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, எதிரிகள் சார்பான சட்டத்தரணிகள் அட்பார் முன்னிலையில் தொகுப்புரையின் சமர்ப்பணத்தினை அளிப்பதற்காக நாளை வரை (புதன்கிழமை) ரயல் அட் பார் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.