Saturday, August 26, 2017

வித்தியாவிற்கு அடுத்து மற்றுமொரு மாணவி கொடூரமான முறையில் கொலை!

நாட்டில் குற்ற செயல்கள் அதிகரித்து சென்று கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இறக்குவானை, படேயாய பகுதியில் உயர்தரத்தில் கற்று வந்த மாணவி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மடுல்ல மேலதிக நீதவான சரத் விஜேகுணவர்தன உத்தரவிட்டுள்ளார்.
படேயாய பகுதியை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த மாணவி படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், தந்தையுடனேயே இந்த மாணவி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு பகுதியில் உயர்தரம் கற்றுவந்த மாணவி வித்தியாவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அதை தொடர்ந்து இந்த மாணவியும் பலவந்தப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

திருடிவிட்டு தப்பிச்சென்றவருக்கு வந்த சோதனை!

யாழ். கந்தர்மடத்தில் இனம் தெரியாத மர்ம நபரொருவர் நூதன முறையில் திருடிய சம்பவம் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று (25) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இனம்தெரியாத நபர் ஒருவர் அடுத்தடுத்த வீடுகளில் பணம், எரிவாயு சிலிண்டர், கைத்தொலைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுள்ளார்.
வீடுகளில் திருடிய பின் தப்பிச் சென்ற போது, இரு வீடுகளில் மறைத்து பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்களில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அவரது உருவம், அவர் பயன்படுத்திய வாகனம் என்பன மிகத் தெளிவாக குறித்த கண்காணிப்புக் கெமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகவே திருடனைப் பிடிப்பதற்கு இவை இலகுவாக இருக்கும் என்று யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் வடகொரியா அடாவடி: தென்கொரியா சாடல்!!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
வடகொரியா இன்று (சனிக்கிழமை) காலை புதிய ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் அறிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த அணு ஆயுத சோதனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் செவிடன் காதில் ஊதிய சங்கபோல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது.
வடகொரியாவின் காங்வான் மாகாணத்தில் இருந்து இன்று காலை செலுத்தப்பட்ட ஏவுகணை 250 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து கடலில் விழுந்துள்ளதாக தென்கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹார்வி புயலால் அமெரிக்காவுக்கு ஆபத்து: ஆர்ப்பரிக்கும் அலைகள்!

 தற்போது உருவாகியுள்ள ‘ஹார்வி புயல்’ எனும் அதிபயங்கர புயலினால் அமெரிக்கா பேரழிவை சந்திக்கவுள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா – மெக்சிக்கோ வளைகுடா கடலில் ‘ஹார்வி’ எனும் அதிபயங்கர புயல் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகியுள்ளது.
இந்த புயலின் எதிரொலியாக கடலின் நீர்மட்டம் தற்போது 12 அடி உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்படுகதிறது.
டெக்சாஸ், லூசியானா மற்றும் வடக்கு மெக்சிக்கோ பகுதிகளில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்வதாக கூறப்படுகிறது.
அத்துடன் 97 சென்ரி மீற்றர் மழை வீழ்ச்சி இருந்தமையால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹார்வி’ புயல் இன்று அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என கூறப்படும் நிலையில், குறித்த புயலானது கரையைக் கடக்கும்போது மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
 கடும் மழையும் வெள்ள அபாயமும் ஏற்படலாமென்பதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2005 ஆம் ஆண்டு புளோரிடாவை வில்மா புயல் தாக்கியிருந்தது.
இதனைத்தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் புயல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓகஸ்ட் 26: அன்னை தெரசா பிறந்த தினம்!!

அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட அன்னை தெரசா 1910 ஆம் ஆண்டு ஓகஸ்டு 26 ஆம் திகதி பிறந்தார்.
இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.
1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் நிலையிலிருந்தவர்களுக்குக் கூட தொண்டாற்றியவர்.
முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.
1979இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.
அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.