Monday, August 7, 2017

மனித எல்லைகளை மீறிய தங்க மகன்... உசைன் போல்ட்!

தடகளப் போட்டியின் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவரான உசைன் போல்ட், லண்டன் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியுடன் ஓய்வுபெற்றார். வரும் 21-ம் தேதியுடன் தனது 31-வது வயதை எட்டும் உசைன் போல்ட், இந்த அறிவிப்பை போன வருடம் வெளியிட்டார். `மின்னல் மனிதன்' உசைன் போல்ட் பற்றிய சிறிய அலசல்...
1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, உசைன் போல்ட் பிறந்தார். சிறு வயது முதலே கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் ஆர்வம்காட்டிய உசைன் போல்ட், தனது 15-வது வயதில் தடகளப் போட்டிகளில் பங்கேற்றார். கரிஃப்டா விளையாட்டுகளில் ஜமைக்கா சார்பில் முதல்முறையாகப் போட்டியிட்டு, 400 மீட்டர் ஓட்டத்தில் தனது அப்போதைய சிறந்த ஓட்டத்தை (48.28 நொடியில்) நிகழ்த்தி, வெள்ளிப்பதக்கம் வென்றார். அந்தப் போட்டியின் 200 மீட்டர் பந்தயத்திலும் 21.81 நொடியில் ஓடி, வெள்ளிப்பதக்கம் வென்றார். ஹங்கேரியில் அதே ஆண்டில் (2001) நடைபெற்ற `உலக இளையோர் தடகளப் போட்டி'யில் பங்கேற்று உலக அரங்கில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.  அந்தப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறாவிட்டாலும், தனது அப்போதைய சிறந்த ஓட்ட நேரமாக 21.73 நொடியைப் பதிவுசெய்தார். தன் சொந்த ஊரான கிங்ஸ்டனில் நடைபெற்ற 2002-ம் ஆண்டுக்கான உலக இளையோர் தடகளப் போட்டிகள் மூலம், தன் சொந்த மக்கள் முன்னிலையில் 200 மீட்டர் ஓட்டத்தை 20.61 நொடியில் கடந்து வெற்றிபெற்றார். இளையோர் போட்டியில் தங்கம் வென்ற இளம் வீரர்களுள், போல்ட்டின் வெற்றியே இதுவரை தங்கம் வென்றவருள் மிக இளம் வயதில் நிகழ்த்திய வெற்றி. அதே தடகளப் போட்டியில் ஜமைக்க தொடர் ஓட்ட அணியில் பங்கேற்று 4×100 மீட்டர் மற்றும் 4×400 மீட்டர் பந்தயங்களில் முறையே 36.15 நொடி  மற்றும் 3:04.06 நிமிடத்தில் ஓடி, வெள்ளிப்பதக்கங்களை வென்றார். மேலும், 2003-ம் ஆண்டு நடைபெற்ற கரிஃப்டா தடகளப் போட்டி மற்றும் உலக இளையோர் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்று அசத்தினார்..
மே 31, 2008-ம் ஆண்டில் நியூயார்க் நகரின் ஐகேன் விளையாட்டரங்கில் நடைபெற்ற ரீபாக் கிராண்ட் ப்ரீலீக்கில், 9.72 நொடியில் 100 மீட்டர் ஓடி புதிய உலகசாதனை படைத்தார் போல்ட்.
உசைன் போல்டை உலகம் முழுவதும் நாயகனாகிய அந்தத் தருணம், 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி. ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் 9.69 நொடியில் ஓடி, தனது சாதனையையும் முறியடித்து உலக சாதனை படைத்தார். இதை அடுத்து 200 மீட்டர் பந்தயத்தில் 19.30 நொடியில் ஓடி, புதிய உலக சாதனை படைத்தார். இரு தினங்கள் கழித்து நடைபெற்ற 4 × 100 தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஜமைக்க அணியில் மூன்றாம் பகுதியை போல்ட் ஓடி, மூன்றாவது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆனால், இந்தத் தொடரில் தன் சகவீரரான நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்ததால் அந்தத் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது..
2009-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 நொடியில் ஓடி, உலக சாதனை படைத்தார். மேலும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பந்தயத்தூரத்தை 19.19 நொடியில் கடந்து மீண்டுமோர் உலக சாதனை படைத்தார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் முன்னதாகவே ஓட்டத்தைத் தொடங்கியதால், பிழையான தொடக்கத்தின் அடிப்படையில் பந்தயத்திலிருந்து நீக்கப்பட்டார்.
2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற `கோல்டன் காலா'  மற்றும்  `உலக சாம்பியன்ஷிப்பில்' 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில்  தங்கம் வென்ற உசைன் போல்ட், உலக தடகளப் போட்டிகளில் தனது ஆதிக்கத்தைக் காட்டினார்.
2015-ம் ஆண்டு பெய்ஜிங் உலகப் போட்டிகளில், மீண்டும் 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்த நூற்றாண்டின் சிறந்த தடகள வீரர் என்று அனைவரும் புகழும்வண்ணம் திகழ்ந்தார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசைக்க முடியாத சாதனைகளைப் படைத்தார். இதன் மூலம் `மூன்று ஒலிம்பிக்கில் தொடர்ந்து தங்கம் வென்ற வீரர்' என்ற பெருமையைப் பெற்றார். இதையடுத்து  கடந்த மாதம் மொனோக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் தங்கம் வென்றார்  உசைன் போல்ட்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த உசைன் போல்ட், தனது விடா முயற்சியால் பல இன்னல்களைக் கடந்து பல சாதனைகளைப் புரிந்தார். முயன்றால் எவரும் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு, உசைன் போல்ட் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இவரின் சாதனைகளை கௌரவிக்கும்விதத்தில் IAAF, வருடந்தோறும் வழங்கும் `சிறந்த உலக விளையாட்டு வீரர்' பட்டத்தை 2008, 2009, 2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் பெற்றார். கூட்டத்தில் ஒருத்தனாக இருந்து ஆயிரத்தில் ஒருவனாக மாறி, தடகள உலகின் `தங்கமகன்' எனப் போற்றப்படும் உசைன் போல்ட், அனைவருக்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். அவரது சாதனைகள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாத சுவடுகளே!

துன்னாலையில் 90பேர் STFவிடம் சரணடையாவிட்டால் நிலமை மோசமாகும்

துன்னாலையில் போலிஸ் விசேட அதிரிடிப்படை , இராணுவம் மற்றும் கடற்படைமீது தாக்குதல் நடாத்திய 96பேரும் தாமாக முன்வந்து போலீசில் சரணடைய வேண்டும் தவறினால் அனைவரும் கைது செய்யப்பட்டே வடமராட்சி பகுதியில் இருந்து விசேட அதிரடிப்படை வெளியேறும் என்று தெரிய வருகிறது.
துன்னாலையில் போலிசார் மீது 96பேர் இணைந்து தாக்குதல் நடாத்தி இருந்தனர்.
பருத்தித்துறை மற்றும் நெல்லியடி போலிஸ் நிலையத்தின் வாகனங்கள் முற்றுமுழுதாக சேதமடைந்தன.
போலிசார் உதவிக்கு விசேட அதிரடி படையினரை எடுத்தனர் ஆனாலும் விசேட அதிரடி படையினர்மீதும் கடுமையான தாக்குதல் துன்னாலை வன்முறை கும்பலால் நடாத்தப்பட்டது.

விசேட அதிரடிபடையினரால் பின்வாங்கப்பட்ட நிலையில் கடற்படை இறக்கப்பட்டபோதும் கடற்படையினரும் கடுமையான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பில் இருந்து இறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் இன்றுவரை 96பேரில் 14 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர்.
புகைப்படங்கள் மற்றும் பெயர்களுடன் விசேட அதிரடி படையினர் தினமும் சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தி வருகின்றனர்.
விசேட அதிரடி படையினர் தம்மை நெருங்கினால் தாக்குவதற்கு கத்திகள் , கோடரிகள் , கட்டு துவக்குகள் , கை குண்டுகள் சகிதம் 92 பேரும் வடமராட்சியின் சோழியவத்தை, பற்றைகள் , பொதுமக்கள் குடியிருக்காதவிடுகள், வீதிகளில் தலைமறைவாக நடமாடி வருவதாக STF அதிரடி படை வட்டாரங்கள் ஊடாக அறிய முடிகிறது.

துன்னாலை கலிகை மற்றும் குடவத்தை பகுதியை சேந்த ஆயுதம் ஏந்திய 96பேரும் உடனடியாக போலீசிடம் சரணடைய வேண்டும் எனவும் 96பேரையும் கைது செய்யும்வரை விசேட தேடுதல் வேட்டை அரங்கேறும் என்று விசேட அதிரடி படை வட்டாரங்கள் தெரிவித்தன

படகு சவாரி நடந்த கூவத்தை பாழாக்கி வெச்சது யாரு? - கூவத்தின் சோகக் கதை

கூவம் பற்றியக் கட்டுரை என்றவுடன் இன்றைய அரசியல் சூழல்களைப்பற்றி கற்பனை செய்துகொள்ளாதீர்கள் வாசகர்களே... இது நிஜமான கூவத்தைப்பற்றிய அக்கறையான கட்டுரை! 


கூவம் என நாம் மூக்கைப்பிடித்தபடி இன்று கடக்கும் கூவத்தின் பழையப் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா...அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அசந்துதான் போவீர்கள். 'மதராசப்பட்டினம்' காலத்தில் தெளிந்த நன்னீராகக் கரையைத் தொட்டு ஓடிய கூவம்தான் இன்று சாக்கடையாக நிறம் மாறி நாற்றமடித்துக் கொண்டிருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல; சென்னைக்கு ஏதோ ஒரு காரண காரியத்துக்காக வந்தவர்கள்தான். 

சென்னைக்கு வந்தபோது எல்லோரும் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஒரு முகச்சுழிப்போடுதான் இந்தக் கூவம் நதியைக் கடந்து போயிருப்போம். ஆனால், இன்று அந்த வாடையே சென்னை முழுமைக்கும் பழகிப் போக... எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல், ஒவ்வொரு நாளும் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.

'இந்தக் கூவம்தான் ஒரு காலத்தில், சென்னையின் குடிநீர் தேவைக்கான பிரதான ஆதாரம்' என்று சொன்னால், நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், அதுதான் உண்மை! 'சென்னையின் தேம்ஸ்' என்று ஆங்கிலேயர்களால் வர்ணிக்கப்பட்ட இந்த நதி மொத்தம் 64 கிலோமீட்டர்கள் பயணித்து நேப்பியர் பாலத்தின் கீழ் கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் கேசாவரம் என்னும் சிற்றூரில், கல்லூர் என்னும் ஆற்றின் கிளையாக தோன்றும் இந்தக் கூவம், 32 கிலோமீட்டர் தூரத்தை நகர்ப்பகுதியிலும், மீதமுள்ளவற்றைக் கிராமப்புறங்களிலும் கடந்து தன் பயணத்தைத் தொடர்கிறது.

கூவம் எங்குதான் மாசடைகிறது தெரியுமா?

கேசவரத்திலிருந்து வரும் கூவம் திருவேற்காடு அருகில்தான் தன் இயல்பை இழக்கத் தொடங்குகிறது. அதுவரை இந்தக் கூவம் பல கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும், நீர்ப்பாசனத்துக்கு ஊற்றாகவும் இன்றளவும் இருக்கிறது தெரியுமா? கேசாவரத்துக்கும் திருவேற்காட்டுக்கும் இடையில் இருக்கும் புட்லூர் தடுப்பணையில், இன்றும்கூட நல்ல தண்ணீர் இருப்பதைக் காண முடிகிறது. நாம் நினைக்கும் கூவமாக இல்லாமல் சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கும் நீரை தடுப்பணை மூலம் தடுத்துள்ளனர். சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் 300 அடியைத் தாண்டி கீழே சென்று கொண்டிருக்க இந்த தடுப்பணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் 60 முதல் 70 அடிக்குள் நல்ல தண்ணீர் கிடைப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த வருட வறட்சிக்கு காவிரியே ஆட்டம் கண்டுப் போயிருக்க... இந்தக் கூவம் இன்றளவும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல கிராமங்களில் விவசாயத்தை தலைநிமிரச் செய்து வருகிறது. 'சென்னைக்கு அருகில் இப்படியும் ஊர்களா?' என்று வியக்கவைக்கிறது.
தடுப்பணையில் மீன்கள் துள்ளி விளையாடுவதையும், அதைப் பிடிக்க ஆவலோடு காத்திருக்கும் கொக்கு கூட்டத்தையும் பார்க்கும்போது கூவத்தின் ரம்யம் மனதைக் கவர்கிறது.

கூவம் முதன்முறையாக எப்பொழுது இப்படி நிறம் மாறியது?

பிரிட்டிஷ் அரசாங்கம் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது இங்கிலாந்துக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக 'மார்டின் குக்' என்பவர் நெசவாளர்களை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து கூவத்துக்கு அருகில் குடியமர்த்த முதல் முறையாக கூவம் சாயமாகிப் போனது. இந்நிலைத் தொடர்ந்ததால் பல குடியிருப்புகள் சிரமம் இல்லாமல், கூவத்தை கழிவுநீர் வடிகாலாக மாற்றிக் கொள்ளத் தொடங்கின. நாளடைவில், பல தொழிற்சாலைகளும் கூவத்தைக் கழிவு நீர் விடும் இடமாக்கிக்கொள்ள, தன்னை மீட்டுக்கொள்ள முடியாத அளவுக்கு கூவம் உருமாறிப்போனது.தற்போதைய நிலவரப்படி சென்னையில், 127 இடங்களில் கழிவுநீர் பெருமளவில் கூவத்தோடு கலக்கிறது என்பதுதான் கூவம் எனும் கதையின் உச்சக்கட்ட சோகம். இதையெல்லாம் நாம் படிக்கும்போதே, 'இந்தக் கொடுமைக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?' எனும் கேள்வி எழுவது இயல்பே.

அரசாங்கம் ஏதும் செய்யாமல் இல்லை. ஆனால், தீட்டப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும் கூவத்தைச் சுத்தப்படுத்தாமல், எங்கு சென்றது என்றுதான் புரியவில்லை.

முதன் முதலில் 1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபொழுது 'கூவத்தை அழகுப்படுத்தும்' திட்டத்துக்காக 2.2 கோடி நிதியை ஒதுக்கினார். அப்பொழுது கருணாநிதிதான் பொதுப் பணித்துறை அமைச்சர். இந்தத் திட்டத்தின் மூலம் கூவத்தில் பல படகுகள் விடப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பெயரில் ஏழு இடங்களில் மணிமண்டபங்களும் கட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து தி.மு.க ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் கூவம் நதி மேம்பாடு திட்டங்கள் போடப்பட்டன. ஆனால், மாற்றம்தான் பெரிதாக இல்லை. கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி என தி.மு.க மேற்கொண்ட நடவடிக்கைகளால் கூவம் அளவு அது எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டதுதான் மிச்சம். கூவம் அழகாவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகவே இல்லை. 
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டாலும் இன்றளவும் பெரும்பாலான கழிவு கூவத்தில்தான் கொட்டப்படுகின்றன என்பது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியப் போக்குக்கான உதாரணம்.

இதன் பின்பு 2015-ம் ஆண்டு ஜெயலலிதா கூவம் நதியை சுத்தப்படுத்துவதற்காக 2,000 கோடி ரூபாயை நிதியாக ஒதுக்க, அதன் மூலம் 3 கட்டங்களாக கூவம் நதியைச் சுத்தப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்றளவும் கூவம் அப்படியே சாக்கடையாகத் தான் இருக்கிறது. 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது கூவத்தின் அழகிய முகத்தை 2 நாள் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மீண்டும் சாக்கடையாக மாற்றியப் பெருமை நம்மையேச் சாரும்.

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் முன் நம்மையே சில கேள்விகள் கேட்போம். ஒரு காலத்தில் மீன்பிடித் தொழிலும், படகு போட்டியும் களைகட்டிய இந்தக் கூவம் இன்று தன் அடையாளத்தை தொலைத்து நிற்க முழு காரணம் நாம்தான் என்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? நம் வீட்டின் கழிவு நீர் எங்கே போகிறது என்று தெரியுமா? மிக சுலபமாக பாலித்தின் பைகளை மூட்டைக் கட்டி நீர்நிலைகளில் தூக்கிப் போடுவதின் விளைவு தெரியுமா? நம் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல தண்ணீர் என்பதையே லட்சியமாக்கப் போகிறோமா? இந்தக் கேள்விகளுக்கானப் பதில்கள்தான் நாம் நீர்நிலைகளை எப்படியெல்லாம் மாசுபடுத்திவிட்டோம் என்பதற்கான விடையைச் சொல்லும்.

'நீ விரும்பும் மாற்றத்தை உன்னிலிருந்து தொடங்கு' என்பார் மகாத்மா. மாற்றத்துக்கான விதையை நாம் விதைப்போமா? இனியாவது நீர்நிலைகளின் முக்கியத்துவம் உணர்வோமா? கழிவுநீர் வடிகால் அமைப்பது, கழிவுநீரை கூவத்தில் கலக்கவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது என அரசாங்கமும் பொறுப்பாக செயல்பட்டு கூவத்துக்கு மறு உருவம் தருமா?

ஏனெனில், தாகத்துக்கு தண்ணீரைத்தான் குடிக்க முடியும் அல்லவா?

வியட்நாமில் கடும் வெள்ளம்: 26 பேர் உயிரிழப்பு

வடக்கு வியட்நாமை தாக்கிவரும் கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
41 மில்லியன் டொலர்கள் அளவுக்கு பொருள்சேதம் ஏற்பட்டுள்ளதாக அரச அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் வகையில் வீதிகள், நீர் அமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என அனர்த்த முகாமைத்துவ கட்டுப்பாட்டு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் சட்டவிரோத குடியிருப்புக்கள்: கல்வியை இழக்கும் மாணவர்கள்!!

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக காணிகள் சுவீகரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக குடியிருப்புகள் கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு உப்பூறல் பிரதேசத்தில் உள்ள இரு தமிழ் பாடசாலைகளும் தரம் 5 வரை மட்டுமே இருப்பதால் பலர் கல்வியைத் தொடர இலங்கைத் துறைமுக முகத்துவாரம் எனும் இடத்திற்கே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலர் 5 ஆம் தரத்திலேயே கல்வியை இழக்கும் துன்பியல் நிலை காணப்படுகிறது.
மேலும் அரசாங்கம் புதிய பாடசாலை ஒன்றை கட்டுவதற்காக ஆரம்பித்த நிலையில் தனிநபர் ஒருவர் தனது காணியென உரிமை கொண்டாடி அதிபருக்கெதிராக வழக்கு போட்டதாகவும் அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
தற்போது அப்பாடசாலை கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழர் பூமியான நல்லூர் தொடக்கம் உப்பூறல் வரை பல சட்டவிரோத குடியேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஓகஸ்ட் 07: அமெரிக்க தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்!

தென் கிழக்கு ஆப்பிரிக்கான நாடுகளான தான்சானியா மற்றும் கென்யாவின் தலைநகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது.
இதில் 220 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். டிரக்கில் ஏற்றி வந்த குண்டுகளை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.
அமெரிக்க படைகள் சவுதி அரேபியாவிற்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.