Sunday, February 25, 2018

அம்பலமானது சொத்து மதிப்பு: கருணா எத்தனையாவது இடம் தெரியுமா?

இலங்கையின் அரசியல்வாதிகளில் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று தகவினை வெளியிட்டுள்ளது.
அந்த வரிசையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும்,
இவர்களது சொத்து மதிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை விட அதிகம் என கூறப்படுகிறது.
இந்த தகவலானது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சஞ்சிகையின் படி முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான் முதலிடம்.
அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள் விபரம்;
முதலாமிடம் – மகிந்த ராஜபக்ச (18 பில்லியன் டொலர்)
இரண்டாமிடம் – அமைச்சர் அர்ஜின ரணதுங்க (6 கோடி 80 லட்சம் டொலர்)
மூன்றாமிடம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)
நான்காமிடம் – ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்)
ஐந்தாமிடம் – கருணா (17 லட்சம் டொலர்)
ஆறாமிடம் – ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்)
ஏழாமிடம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்)
எட்டாம் இடம் – ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்)
ஒன்பதாம் இடம் – ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்)
பத்தாம் இடம் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்)

Monday, February 12, 2018

தே.மு. தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு: 8 குண்டுகள் மீட்பு!!!

 மட்டக்களப்பு புதிய காத்தான்குடி 6இல் அமைந்துள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 3.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்சிக் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் வெடித்துள்ள நிலையில் மேலும் வெடிக்காத 8 நேரக் கணிப்புக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது காத்தான்குடி நகரசைபைக்காகப் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அங்கு 5,815 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் காரியாலயத்தில் சிறிதளவான சேதமும் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, February 6, 2018

தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரியை நாடு கடத்துமாறு வலுக்கும் கோரிக்கை

 புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 70 வது சுதந்திரத் தினத்த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசின் தமிழனப் படுகொலைகளை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக சீருடையில் நின்றிருந்த உயர்ஸ்தானிகர் அலுவலக பாதுகாப்பு விவகார இணைப்பதிகாரி தனது வலது கையின் விரலை கழுத்திற்கு குறுக்கே பல தடவைகள் அசைத்து கழுத்தை வெட்டுவதாக சமிக்ஞை செய்துள்ளார்.
இந்த செயலானது தம்மை அச்சுறுத்துவதாக உள்ளது எனக் கூறி சமூக வலைத்தளங்களில் காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக சீருடையில் நின்றிருந்த பாதுகாப்பு விவகார இணைப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து இவ்வாறு நடந்துகொண்ட விதம் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளது.
இவ்வாறு தமிழருக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டி பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜொன்ஸ்டனுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
பிரித்தானியாவின் விருந்தாளியாக உத்தியோகபூர்வ கடமையொன்றில் ஈடுபட்டுள்ள ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அனுமதிக்கவோ முடியாதது.
அது மாத்திரமன்றி இது அச்சுறுத்தும் செயற்பாடு என்று பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் உறுப்பினர்களான ஜோஹான் ரயான்மற்றும் ஷிவோன் மெக்டொனால்ட் ஆகியோரின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்கர பெரேராவின் தூதரக அதிகாரிக்கான அந்தஸ்த்தை இரத்துச் செய்து அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.