” கற்றல் கற்பித்தல், பேசுவதை புரிந்துகொள்ள உதவும் ஒலி-வரி வடிவமாற்ற நுட்பங்கள், தகவல் கிடங்குகள், வணிகப் பயன்பாடு, மின்னூல்கள் ஆகியவை தொடர்பாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன” என்று உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநர் த.தவரூபன் தெரிவித்தார்.
சிங்கப்பூர் சிவக்குமாரனின் ‘கற்பித்தலில் தரவக மொழியியலின் பங்கு’, இலங்கை மு.மயூரனின் ‘இலங்கையில் அலுவலகமொழிகள் நடைமுறையாக்கத்தின் ஒரு பகுதியான தமிழ்மொழி நடைமுறையாக்கத்தில் தகவல்நுட்பத்தின் பங்கு’, மா.ஜெயகானந்தந்கு.வினுஜனன், செ.ஜெயபாலன் ஆகியோரின் ‘அடுத்த தலைமுறைக்கான தமிழ் மொழி நூல்களின் ஒருங்கிணைக்கப்பட்ட தேடு’, இந்தியாவைச் சேர்ந்த முனைவர் விஜயராணியின் ‘ பார்வை மாற்றுத்திறனாளிகளின் தமிழ் மென்பொருள் பயன்பாட்டில் தேவைகள், சிக்கல்கள், தீர்வுகள்’, சாய்ராம் ஜெயராமந் முருகானந்தம் சுந்தர்ராஜன் ஆகியோரின் “2016 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலும் தமிழக இளைஞர்களின் அரசியல்சார்ந்த சமூக இணையதளப் பயன்பாடும்’, மலேசிய எஸ்.புஷ்பராணியின் ’இலக்கணப் பிழைகளின்றி தமிழ் எழுத எட்மோடோ வழி மெய்நிகர் கற்றல் கற்பித்தல் அணுகுமுறை’, கஸ்தூரி இராமலிங்கத்தின் ‘ஊடாடல், நகர்ப்படங்கள் கலந்த மின்னூல்கள் வழி குழந்தைகளுக்கான தமிழ்க் கல்வி’ ஆகியவை உட்பட்ட கட்டுரைகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
கட்டுரை தேர்வுக்குழுவின் தலைவரான கனடா பேரா. செ.இரா.செல்வகுமாரிடம் கட்டுரைத் தேர்வு குறித்துக் கேட்டதற்கு,
”முன்பு நடந்த உத்தமம் நடத்திய மாநாடுகளின் ஆய்வரங்கக்குழுவில் தலைவராக இருந்த நான்கு பேர், இந்தக் கட்டுரைத் தேர்வுக்குழுவில் இருந்தார்கள். எங்களுக்கு ஏறத்தாழ 90 கட்டுரைச் சுருக்கங்கள் வந்தன. அவற்றுள் 34 கட்டுரைச் சுருக்கங்களே ஏற்கும்படியாக இருந்தன. எட்டு கட்டுரைகள் மேம்படுத்தக்கூடியனவான இருந்தன. அவற்றின் ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களில் சிலர், தங்களின் கட்டுரைகளை இருமுறையுங்கூட செம்மைப்படுத்தி அனுப்பிய பிறகு அவற்றில் 3 கட்டுரைகளை ஏற்றோம். முதலில் 31, பின்னர் 3, ஆக 34 கட்டுரைகள் தேர்வாகின. பெரும்பாலான கட்டுரைகளில் ஆய்வுத்தன்மை போதுமான அளவுக்கு இல்லாமல் இருந்ததைப் பார்க்கமுடிந்தது. அடிப்படை ஆய்வுத் தரமே இல்லாமல் பல கட்டுரைச்சுருக்கங்கள் வந்திருந்தன. வரும் ஆண்டுகளில் ஆய்வுக்கட்டுரை எழுதுவது பற்றியும் ஆய்வு செய்வது பற்றியும் பட்டறைகள் நடத்துவது பற்றிப் பேசியிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
டொரண்டோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் நடக்கும் இம்மாநாட்டுக்கு, வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பாங்கு அறிதிறன் இயந்திர அறிவுத்திறனுக்கான மையம், கனடா நாட்டு மின் மற்றும் மின்னணுப் பொறியியல் கழகம்- (IEEE Canada), அண்ணாமலைப் பல்கலைக்கழக கனடா கிளை ஆகியவை துணைசெய்கின்றன.
தொடக்கவிழா, சிறப்புச் சொற்பொழிவுகள் உட்பட மற்ற நிகழ்ச்சிகளில் அனைவரும் இலவசமாகப் பங்கேற்கலாம். மூன்று சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளரும் ‘உத்தமம்’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான மலேசியாவின் முத்து நெடுமாறன், மதுரைத்திட்ட முன்னோடியும் உத்தமம் அமைப்பின் முன்னோடிகளில் ஒருவருமான சுவிட்சர்லாந்து பேராசிரியர் முனைவர் கு. கல்யாணசுந்தரம், வாட்டர்லூ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன்றூவாங்கு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்வான், இங்கிலாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். கருத்தரங்கில் பங்கேற்க மட்டும் கட்டணம் உண்டு. இது தொடர்பான விவரங்கள், இம்மாநாட்டின் இணையதளத்தில் (https://tamilinternetconference.infitt.org/home/) விரிவாகக் காணலாம்.
முன்னதாக, இந்த தமிழ் இணைய மாநாட்டுக்கான அடையாளம் வடிவமைப்புப் போட்டி நடத்தப்பட்டதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மெர்லின் ஃப்ளோரன்சின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர், திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியில் பணிபுரிகிறார் என்பது தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட உத்தமம் அமைப்பானது, 2000ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டதாகும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்த மு. ஆனந்தகிருஷ்ணன், இதன் நிறுவன காலகட்டத் தலைவர் ஆவார். தற்போதைய தலைவராக தமிழ்நாட்டின் செல்வமுரளியும், செயல் இயக்குநராக இலங்கையைச் சேர்ந்த த.தவரூபனும் செயல்பட்டுவருகின்றனர்.
(தேர்வுசெய்யப்பட்டுள்ள கட்டுரைகளைப் பார்க்க:https://tamilinternetconference.infitt.org/selected-papers/)
No comments:
Post a Comment