சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில், விலங்கிடப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த கைதி ஒருவர் சினிமா பாணியில் அங்கிருந்து தப்பிச் சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.
வாரியப்பொல பகுதியைச் சேர்ந்த முதியன்சலாகே பிரியந்த ஜயமகா எனும் கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ள குறித்த கைதி, வைத்தியசாலையில் 20 ஆவது வோர்ட்டில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அந்த வோர்ட்டில் உள்ள கட்டிலில் குறித்த கைதிக்கு விலங்கிடப்பட்டே சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தனக்கு இயற்கை தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியுள்ளதாக கூறி அந்த கைதி வைத்தியசாலை மலசல கூடத்துக்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கோரியுள்ளார். அதன்படி கைதியை மலசல கூடத்துக்கு அழைத்துச் சென்றுள்ள சிறைக் காவலர், மலசல கூடத்தின் வெளியே, உள்ளே சென்ற கைதி வரும் வரை காவலுக்கு நின்றுள்ளார்.
வெகு நேரமாக உள்ளே சென்ற கைதி வெளியில் வராததன் விளைவாக கதவை திறந்து பார்த்த போது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
மலசல கூடத்தில் காற்றோட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள சிறிய ஜன்னலுக்கு அருகே, சுவரின் கல்லொன்றை அகற்றி, அருகில் செல்லும் குழாயின் உதவியுடன் அங்கிருந்து குறித்த கைதி தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்;ட்டு வரும் வழக்கொன்றில், பிரதிவாதியான குறித்த கைதி, தான் மரணித்துவிட்டதாக போலியாக மரண சான்றிதழ் ஒன்றினை மன்றில் முன்வைத்து அது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் சிறை அதிகாரிகள் விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment