Monday, October 30, 2017

யாழ் பல்கலையில் இன்றிலிருந்து கதவடைப்பு போராட்டம்!

அரசியற் கைதிகளின் போராட்டத்திற்கு உரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றிலிருந்து பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தினை முன்னெடுத்துவந்த மூன்று அரசியற்கைதிகள், தமது வழக்கினை தமிழ் பிரதேச நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். குறித்த கைதிகளின் கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்வழி பல்கலைக்கழக மாணவர்களும் தமது போராட்டங்களினை நடத்திவந்த நிலையில் அரசியற் கைதிகள் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர். குறித்த சந்திப்பிலும் சாதகமான நிலை எதுவும் எட்டப்படாத நிலையிலேயே ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழக சமூகம் இந்த கதவடைப்பு போராட்டத்தினைத் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பல்கலைக்கழகத்தில் பருவகாலப் பரீட்சைகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் பலவும் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்திற்கும் மத்தியிலேயே குறித்த கதவடைப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment