நாட்டில் மிகவும் மோசமாக மக்களை பாதித்துவரும் டெங்கு நோயின் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் டெங்கு நோயின் ஆதிக்கம் இருந்ததை விடவும் இரண்டு மடங்கு அதிகரிப்பு வேகம் இந்த ஆண்டில் இதுவரையிலான ஏழு மாதகாலத்தில் காணப்படுகின்றது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 543 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டில் 310 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலத்திற்குள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆயிரத்து 600 ஆக உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. கொழும்பில் நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் இதுவரையில், 3 ஆயிரத்து 688 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டின் சகல பாடசாலைகளையும் துப்புரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் நாட்டின் சகல பகுதிகளிலும் வீடுகள், காணிகள், அலுவலகங்கள் அனைத்தையும் சோதனை செய்யும் நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருந்த 4500 க்கும் அதிகமான நபர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் 459 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இரு நாட்களுக்கான டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றுடன் நிறைவடைந்த இந்த வேலைத் திட்டத்தில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 730 இடங்கள் இனங்காணப்பட்டன.
குறிப்பாக மேல் மாகாணத்தில் இருந்த 58 அரச நிறுவனங்கள் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 7 இடங்கள் டெங்கு பரவும் வகையில் இருந்தமை தெரியவந்துள்ளது. டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாக இருந்த மேல், மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் புத்தளம்,மாத்தளை, உக்குவெல, பதுளை மற்றும் ஹாலி எல ஆகிய பகுதிகளின் சில இடங்களில் டெங்கு நோயாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது. சுகாதார அமைச்சும் பாதுகாப்பு தரப்பும் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றதுடன் சர்வதேச நாடுகளின் மருந்து மற்றும் நிவாரண உதவிகளும் அரசாங்கத்திற்கு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment