அம்பாந்தோட்டை துறைமுகத்தை முறைகேடான விதத்தில் சீனாவுக்கு வழங்கியதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் இயலாமை வெளிப்பட்டுள்ளது. இந்நாட்டில் உள்ள உழைக்கும் வர்க்கம் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை துறைமுக சேவைகள் ஊழியர் பொது ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்நாட்டை பாதுகாக்கவும் துறைமுகசேவையில் பணிபுரியும் பொதுமக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடவுள்ளதாகவும் நாடுதழுவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு செல்லவுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் சந்திரசிறி மஹாகமகே தெரிவித்தார்.
மருதான சனசமூக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடங்களுக்கு குத்தகைகஙகு வழங்கியதன் மூலம் இந்நாட்டில் உழைக்கும் வர்க்கம் கடுமையாக பாதிக்கப்படுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் உதவியுள்ளது. இலஙகைக்கும் சீனாவுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் முற்றிலும் பொய்யானது. நல்லாட்சி அரசாங்கம் அதன் வெளிப்படைத்தன்மையை ஒருபோதும் மக்களுக்கு வெளிப்படுத்த விரும்பவில்லை.
சீனாவுக்கு இலாபத்தில் 70 சதவீதமும் இலங்கைக்கு 30 சதவீதமும் என்ற வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் நாம் முன்னெடுத்த ஆர்ப்பட்டங்களின் பின்னரும் தொடர்ச்சியான அழுத்தங்களின் பின்னருமே இந்த முடிவுக்கு வந்ததாக அரசாங்கம் கூறுகின்றது. முதலில் 80 க்கு 20 என பேசினோம். இப்போது நமக்கு வெற்றி கிடைத்துள்ளளதாக கூறுகின்றனர்.
இதில் என்ன வெற்றி இருக்கின்றது என தெரியவில்லை. உழைக்கும் வர்க்கத்தை படுகுழியில் தள்ளிவிட்டு, எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு வெற்றி என கூறுகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசாங்கத்தில் உழைக்கும் வர்க்கத்தை பாதுகாப்பதாக கூறுகின்றார். ஆனால் எவ்வித ஆளுமையுமின்றி சர்வதேசத்துக்கு எமது நாட்டை காட்டிக்கொடுத்துள்ளனர்.
இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்த்தவர்கள் இதன்பின்னர் திருகோணமலை எண்ணைக் குதத்தை விற்பனை செய்ய முடிவெடுப்பார்கள். இதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் துணைநிற்பார்கள். இதுவே இனிமேல் நடக்க போகின்றது. இந்நாட்டில் உள்ள வளத்தை சூறையாடுவதற்கு சர்வதேச நாடுகளுக்கு இடமளிப்பது பெரும் துரோகச்செயலாகும்.
இந்நாட்டு மக்களை ஏமாற்றியமைக்கு ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களுமே பொறுப்பு கூற வேண்டும். இனிவரும் அழிவுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இவர்களே பொறுப்பு கூற வேண்டும். இந்நாட்டை பாதுகாக்கவும் துறைமுகசேவையில் பணிபுரியும் பொதுமக்களின் நலனுக்காகவும் நாம் தொடர்ந்து போராடவுள்ளோம். இனிவரும் வாரங்களில் நாடுதழுவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து கொண்டு வேலைநிறுத்த போராட்டத்துக்கும் செல்லவுள்ளோம்.
கூட்டு எதிரணியினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் நாம் தீர்மானிக்கவில்லை. அவர்கள் அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தை சீனாவுக்கு விற்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும் பாராளுமன்றத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போதும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது எமக்கு தெரியும். எனவே எமது ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் உண்மையானதாகவும் இந்நாட்டு மக்களுக்காகவானதாகவும் இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment