Wednesday, August 2, 2017

"மனித உயிர்கள் பெரிதா... போலீஸ் வாகனம் பெரிதா?'' - முதல்வருக்கு கதிராமங்கலம் பள்ளி மாணவி கேள்வி


''மனித உயிர்கள் பெரிசா, போலீஸ் வாகனங்கள் பெரிசா?'' எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி கம்பீரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார் கதிராமங்கலத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி. 
திராமங்கலம் கிராமத்தில் போராடிவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அந்தக் கிராமத்துக்கு வந்திருந்தார், தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின். அப்போது, அங்கே இருந்த பள்ளி மாணவியான மதுமிதா, ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். 'ஒஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து 74-வது நாளாகப் போராடிவருகிறோம். அந்த நிறுவனத்தால் எங்கள் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எங்கள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. இதற்குத் தீர்வுகாண வேண்டும்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்த ஸ்டாலின், மதுமிதாவை மேடைக்கு அழைத்துப் பேச சொன்னார். 

மைக்கைப் பிடித்த மதுமிதா, கணீர் குரலில் முழங்கினார். அவரின் பேச்சும் தைரியமும் கூட்டத்துக்கு வந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ''கதிராங்கலத்தில் போராட்டத்தின்போது, காவல் துறையின் இரண்டு ஜீப்களை அடித்து நொறுக்கிவிட்டார்கள். ஒரு மோட்டார் பைக்கை கொளுத்திவிட்டார்கள் என்று முதல்வர் எடப்பாடி சொல்கிறார். அதெல்லாம் பொய்யான தகவல். போலீஸ்காரவங்க அடிச்சதில் எங்கள் ஊரைச் சேர்ந்த இரண்டுப் பெண்களுக்குத்தான் கர்ப்பப்பை இறங்கிப்போச்சு. இன்னொருத்தருக்குக் கால் முறிஞ்சுப்போச்சு. இது எப்படி முதல்வர் எடப்பாடிக்கு தெரியாமல் போச்சு? கதிராமங்கலத்தில் என்ன நடக்கிறது என்றுகூடத் தெரியாமல் ஒரு முதல்வர் இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முதல்வர் பேசுவது நியாயமா? மனித உயிர்கள் பெருசா... போலீஸ் வாகனங்கள் பெரிசா? 
ஓஎன்ஜிசியை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த நான்கு பேர் கும்பகோணம் மருத்துவமனையிலும் ஒருவர் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எங்கள் கிராமத்தில் எண்ணெய் எடுக்க வேண்டாம். கடலிலோ, பாலைவனத்திலோ போய் எடுங்கள் என்றுதானே சொல்கிறோம். பள்ளிக்கூடம் படிச்சுட்டிருந்த பையன் ஒருத்தன் திடீர்ன்னு மயக்கம் அடிச்சு விழுந்துட்டான். டாக்டர்கிட்ட டிரீட்மென்ட்டுக்கு கூட்டிட்டுப்போனால், தண்ணீரில் பிரச்னை இருக்கு, நல்ல தண்ணீரை பயன்படுத்துங்கன்னு சொல்றார். ஒன்பது வயசாகும் அந்த பையனை 21 வயசு வரைக்கும் மாத்திரைச் சாப்பிடணும்னு சொல்லிட்டார். அவன் இதயமும் பாதிச்சிருக்கு. . இதெல்லாம் முதல்வர் கண்ணுக்குத் தெரியலையா? இங்கே இருக்கிற அதிகாரிகள் கண்ணுக்காவது தெரியுமா?'' என்று சரமாரியாக கேள்வி எழுப்புகிறார் மதுமிதா. 
அடுத்துப் பேசிய போராட்டக் குழு உறுப்பினர் கலையரசி, ''ஒவ்வொரு நாளும் நாங்க போராடிட்டிருக்கோம். இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கலை. எங்க குழந்தைகள் பெரிய படிப்பு படிச்சு, லட்சம் லட்சமா சம்பாதிச்சுக் கொடுக்கணும் என்றெல்லாம் எங்களுக்கு ஆசை கிடையாது. எங்க பிள்ளைங்க ஆரோக்கியமாக வாழணும், நிம்மதியா இருக்கணும். இனிமே பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கணும் என்றுதான் விரும்பறோம். அதுக்குகூட எங்களுக்கு உரிமை இல்லையா? ஆயிலும் அமிலமும் கலந்துதான் எங்க வீட்டுக் குழாயில் தண்ணீர் வருது. ஒவ்வொரு நாளும் அந்த விஷத் தண்ணீரைத்தான் எங்க பிள்ளைங்களுக்கு கொடுத்திட்டிருக்கோம். நினைச்சாலே மனசெல்லாம் கொதிக்குதுங்க. உண்ணாவிரதம் இருந்த ஒருத்தர் இப்போ ரத்த வாந்தி எடுத்திருக்கிறார். அப்படி நாங்க என்னங்க தப்பு செஞ்சுட்டிருக்கோம்? எங்களை இந்த மண்ணைவிட்டே துரத்தணும்னு மத்திய அரசும் மாநில அரசும் நினைக்குது. விவசாயிகளையும் விவசாயத்தையும் ஏன் இப்படி கேவலப்படுத்தறீங்க? விவசாயிகள் இளிச்சவாயர்களா? நாங்க வாழ்ந்தாலும் செத்தாலும் அது இந்த மண்ணுலதான் நடக்கும். எங்கள் போராட்டத்தை விடமாட்டோம்'' என்றார் ஆவேசமாக. 

இந்தப் போராட்டக் குரல்களுக்கு என்று தீர்வு கிடைக்குமோ?

No comments:

Post a Comment