Tuesday, October 31, 2017

வவுனியாவில் பொலிசார் குவிப்பு!!

 வவுனியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றக்கோரி இளைஞர்கள் சிலரால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று கருதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த பகுதியில் பதற்றமான ஒரு நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு மக்களை பொருளாதாரத்தால் அடிக்கும் மைத்திரியின் நல்லாட்சியும் அதை எதிர்த்து கேட்காத தமிழ் அரசியல்வாதிகளும்..



யுத்தம் முனைப்புப் பெற்ற காலங்களிலிருந்து வட தமிழீழத்துக்கு எல்லாம் தடை, மின்சாரம் இல்லை, பெற்றோல் இல்லை, சீமெந்தில்லை, சவர்க்காரம் இல்லை, சீனியில்லை, பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களெல்லாம் வடபுல மக்களுக்கு தடை. அத்தோடு ஷெல் அடி, விமானத்தாக்குதலென எந்த நேரமும் எதுவும் நிகழலாம் என்ற நிலையும்,
நிலக்கீழ் பதுங்குகுழியில் ஒரு ஜாம்போத்தலில் உப்புப் போட்டு அதற்குள் சொட்டு எண்ணை விட்டு அந்தத் திரியின் வெளிச்சத்தில் தான் அனைவரும் படித்தார்கள், இலங்கையில் வேறெந்த மக்களுக்குக்கும் ஒருதசாப்தத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக இப்படி ஒரு அடக்கு முறை நிகழந்ததில்லை, ஆயினும் எப்படி நெருக்கியும் எவராலும் அந்த மக்களை வீழ்த்த முடியவில்லை.
அதற்குக் காரணம் அவர்களது தன்னிறைவு வாழ்க்கை முறை.
பணப்பயிர் என்று சொல்லப்படும் புகையிலை,
இருபது அடியில் சுத்தமான கிணற்று நீர்
பனைவளம், அது சார்ந்த வருமானம்
நீண்ட கடற்கரை, அது நீள மீன்பாடு, அதன் வருமானம்.
வட புலத்தின் செறிந்த வளமுள்ள சிவந்த வலிகாம மண்ணில் பயிர்ச்செய்கை, இலங்கையின் மற்றைய நிலங்களின் ஒரு ஏக்கரில் விளைவதை, இந்தச் சிவந்த மண்ணில் ஒரு பரப்பில் விளைவிக்கலாம்.
இப்படி தமைச் சுற்றிக் கொட்டிக் கிடந்த வளங்களால் தமக்குள் தாமே விற்று வாங்கி பணப்புழக்கமும் தமக்குள்ளேயே நிகழ்ந்து
எப்படி நெருக்கிய போதும் அடித்த போதும் வடக்கு மக்கள் வீழாமல் வாழ்ந்தார்கள்.

அதையெல்லாம் மிக அவதானமாக ஆராய்ந்து கவனித்த எதிரி எதெல்லாவற்றாலும் உடைந்து விழாமல் மக்கள் இருந்தார்களோ அது எல்லாவற்றையும் மக்களிடமிருந்து பிடுங்கி விட்டான்,

யுத்தத்தின் பின் வடக்கில் மரக்கறிக் கடையையை விட வங்கிகள் தான் அதிகம், பல்வேறு கவர்ச்சிகர நுண்கடன் வசதிகளைக் காண்பித்து வடக்கில் சுழன்று கொண்டிருந்த அத்தனை பணமும் உறிஞ்சப்பட்டு தெற்கிற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.
வளமான செம்மண் நிலப்பரப்புகள் உயர் பாதுகாப்பு வலையமென்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டு விட்டது
நிலக்கீழ் நன்னீர் செத்துக் கொண்டிருக்கிறது
புகையிலைப் பயிர்செய்கைக்கு தடை
மீன்பாடு தடை
இப்போது பனையில் இருந்து கள் எடுப்பதும் தடை.

புலம்பெயர் தேசங்களில் இருந்து பணம் வருவது நிற்கப்போகும் இன்னும் சில ஆண்டுகளில் வடக்கில் உள்ள மக்கள் தெற்கில் தங்கி வாழ்வோராகப் போவார்கள். இனி ஒரு நெருக்கத்தை யுத்தத்தை எதிர் கொள்ள அவர்களால் முடியாது.

எமது எதிர்காலத்தை அழிக்கப்போகிற எப்படிப் பாரதூரமான ஆபத்தில் வடக்கு மக்கள் மாட்டப்பட்டிருக்கிறார்களென்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலையற்று வடபுலத்தின் அரசியற் தலைமைகள்.

Monday, October 30, 2017

யாழ் பல்கலையில் இன்றிலிருந்து கதவடைப்பு போராட்டம்!

அரசியற் கைதிகளின் போராட்டத்திற்கு உரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றிலிருந்து பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தினை முன்னெடுத்துவந்த மூன்று அரசியற்கைதிகள், தமது வழக்கினை தமிழ் பிரதேச நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். குறித்த கைதிகளின் கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்வழி பல்கலைக்கழக மாணவர்களும் தமது போராட்டங்களினை நடத்திவந்த நிலையில் அரசியற் கைதிகள் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர். குறித்த சந்திப்பிலும் சாதகமான நிலை எதுவும் எட்டப்படாத நிலையிலேயே ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழக சமூகம் இந்த கதவடைப்பு போராட்டத்தினைத் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பல்கலைக்கழகத்தில் பருவகாலப் பரீட்சைகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் பலவும் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்திற்கும் மத்தியிலேயே குறித்த கதவடைப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, October 29, 2017

மன்னாரில் எண்ணெய் அகழ்வதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம்!!

மன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.
கெய்ன் இந்தியா நிறுவனம் முன்னர் எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்ட எம்2 துண்டில், எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு கேள்விப் பத்திரங்களைக் கோரியிருந்தது.
இங்கு எண்ணெய் அகழ்வில் ஈடுபட விருப்பம் தெரிவித்து, 11 நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக, பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலர் பிரீனி விதானகே தெரிவித்துள்ளார்.
2015இல் எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, எம்2 துண்டில் எரிவாயு அகழ்வு முயற்சியில் ஈடுபட்ட கெய்ன் இந்தியா நிறுவனம், அதிலிருந்து விலகிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்: சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

யாழ் அரியாலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் 3 பிள்ளைகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி 17 லட்சம் ரூபாய் பணத்தை நெருக்கமான நண்பருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்து, ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனால் குடும்பமே இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட யாழ் இளைஞர்கள்!

ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட 4 தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து நாடுகடத்தப்பட்ட குறித்த நால்வரையும் விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை நாடுகடத்தப்பட்ட நான்கு பேரும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Saturday, October 28, 2017

இளஞ்செழியனுக்கு தற்கொலை செய்த தாய் எழுதிய கடிதம்

 ‘நீண்ட காலம் வாழ ஆசைப்பட்டோம், மன்னித்து கொள்ளுங்கள்’ இளஞ்செழியனுக்கு தற்கொலை செய்த தாய் எழுதிய கடிதம்

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்த பெண்ணால் எழுதி வைக்கப்பட்ட கடிதமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
தனது தாய் வீட்டாருக்கும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆகியோருக்கு இவ்வாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது மூன்று பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.
குறித்த கடிதத்தில் ஒரு கோடியே 17 இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து தனது கணவன் ஏமார்ந்த நிலையில் தற்கொலை செய்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், தனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு தன்னால் பதில் கூற முடியாத நிலையிலேயே குடும்பத்துடன் தான் தற்கொலை செய்துள்ளதாக மிகவும் உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.
அத்துடன், தனதும் தனது பிள்ளைகளினதும் இறுதிக் கிரியைகளை தனது வீட்டார் நடத்த வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் தனது கணவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸாரிடம் குறித்த கடிதத்தைக் காட்டி எந்தப் பிரச்சினையும் இல்லாம் தனது இறுதிக் கிரியைகளை மிகவும் எளிமையான முறையில் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு எழுதி வைத்த கடிதத்தில், தனது கணவன் 1 கோடியே 17 இலட்சம் ரூபாவைக் கொடுத்து ஏமார்ந்ததனால் கடந்த 09 ஆம் மாதம் 03 ஆம் திகதி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவன் உயிரிழந்த காலத்தில் இருந்து தனது பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்றும், அப்பா எப்ப வருவார், அப்பா கண் திறந்து விட்டாரா, எப்ப பார்ப்பார், ஏன் வரவில்லை, போஸ்மோட்டத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு எங்கட அப்பா வெள்ளை தானே ஏன் கறுத்தவர்? வெள்ளையா வருவாரா, அப்பா வர நாங்கள் பார்க்குப் போவம் என்ற என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை.

தவறு செய்தவர்களை விட தவறு செய்யத் தூண்டுபவர்களே குற்றவாளி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை ஏ.வி வீதியைச் சேர்ந்த சுநேத்திரா என்ற 28 வயதுடைய தாய், கர்சா என்ற 04 வயதுடைய மகள், சஜித் என்ற 2 வயதுடை மகன் மற்றும் சரவணா என்ற ஒரு வயதுடைய மகன் ஆகியோர்கள் இன்றைய தினம் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தைகளின் தந்தையான கிருசாந்தன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடன் தொல்லை காரணத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளுக்கும் உணவில் விஷத்தை கலந்து சாப்பிடக் கொடுத்த தாய், தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் நுண்கடன் தொல்லையால் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும் இவ்வாறு கடன் வழங்குபவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சமூக அமைப்புகள் கோரி வருகின்ற நிலையில், இன்றைய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


Thursday, October 26, 2017

உலகிலேயே சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர் பாஸ்போர்ட் : விசா இன்றி 159 நாடுகளுக்கு செல்லலாம்!!

உலகில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளது.
இந்த பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும்.
சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் குறித்த தரவரிசையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
இதன்படி விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிப்பதன் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்டுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் சிங்கப்பூர் 159 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 159 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
அதற்கு அடுத்த இடத்தில் 158 புள்ளிகளுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்கா 154 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், இந்திய பாஸ்போர்ட் 51 புள்ளிகளுடன் 75வது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் நாடு உள்ளது. அந்த நாட்டின் குடிமக்களை விசா இன்றி 22 நாடுகள் மட்டுமே அனுமதிக்கின்றன.
அதற்கு முந்தைய இடத்தில் ஈராக் (26), பாகிஸ்தான்(26), சிரியா (29) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
159 – சிங்கப்பூர்
158 – ஜெர்மனி
157 – சுவீடன், தென்கொரியா.
156 – பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின்.நார்வே, ஜப்பான்
155 – லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஒஸ்திரியா, போர்சுக்கல்,
154 – மலேசியா, அயர்லாந்து, கனடா, அமெரிக்கா,
153 – கிரீஸ், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா
152 – மால்டா, ஐஸ்லாந்து, செக் குடியரசு,
150 – ஹங்கேரி.
149 – சுலோவேனியா, சுலோவாக்கியா, போலந்து, லுதுவேனியா, லாத்வியா.
இதுகுறித்து ஆர்டான் கேபிட்டல் நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலக நிர்வாகி பிலிப்பி மே கூறியதாவது;
முதல் முறையாக ஆசிய நாடு ஒன்று சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
இது அந்நாட்டின் தூதரக உறவுகள் மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கு ஒரு சான்று என கூறியுள்ளார்.
இந்த பட்டியலில் அமெரிக்க மிகவும் பின்தங்கியுள்ளதற்கு காரணம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் விசா கெடுபிடி காட்டியது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் தோல்வியால் இளைஞன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!!

காதலித்த பெண் வேறு ஒருவரை கரம் பிடித்ததினால் மனவிரக்தி அடைந்த முன்னாள் காதலன் கத்தியினால் தனது கழுத்தி வெட்டி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
வன்னியசிங்கம் வீதி ஆவரங்கால் கிழக்கு பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறான முடிவை எடுத்துள்ளார்.
தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வன்னியசிங்கம் வீதி ஆவரங்கால் சவுந்தரராஜன் கார்த்தீபன் வயது (23) பகுதியினை சேர்ந்த மேற்படி இளைஞன் யாழ். நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக கடமையாற்றி வருவதாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கு முயன்ற இளைஞன் கடந்த பல வருடங்காள யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
காதலித்த யுவதி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெற்றோர் நிச்சயம் செய்த ஆண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். தற்போது அவ் யுவதிக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த யுவதி, யாழ். நகரிற்கு இரண்டு பிள்ளைகளுடன் வந்துள்ளதை கண்ட இளைஞன் மனம் நொந்து போயிருந்ததாக சக நண்பர் கூறினர்.
அத்துடன் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு போயிருந்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில் குறித்த இளைஞன் நேற்று (24) காலை தனியார் நிறுவனத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போது தனது உடமையில் வைத்திருந்த கத்தியினால் தனது கழுத்தினை வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

Wednesday, October 25, 2017

பல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை!!

பல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை!! நடந்தது என்ன?
25.10.2017
செய்திகள்
நோர்தேன் சென்ரர் வைத்தியசாலையில் கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொண்ட 10 நோயாளர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோயாளர்களுக்கான கண் புரை சத்திரசிகிச்சையினை அசண்டையீனமாக தவறான முறையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் உட்பட மன்னர், வவுனியா பகுதியைச் சேர்ந்த 10 நோயாளர்கள் கண் புரை சத்திரசிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை யாழ்;. திருநெல்வேலியில் உள்ள நோர்தேன் சென்ரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாலை 6 முணி முதல் 7 மணிவரை  10 நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சையினை கண் வைத்திய நிபுணர் மலரவன் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளார். இரவு 8.00 மணியளவில் சத்திரசிகிச்சை நிறைவடைந்ததுள்ளது.

இரவு 8 மணியின் பின்னர் நோயாளர்களை வீடு செல்லுமாறு வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அடுத்தநாள்  ஞாயிற்றுக்கிழமை காலை கண் பரிசோதனைக்காக வருமாறு வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களின் நிலமை எவ்வாறு காணப்படுகின்றதென்றும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கேட்டுள்ளனர்.

சத்திரசிகிச்சை மேற்கொண்ட நோயாளர்களுக்கு  நேற்று திங்கட்கிழமை (23.10) காய்ச்சலுடன் கண் திறக்கமுடியாமல் இருந்ததுள்;ளது. நோர்த்தேன் சென்ரல் வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்களை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி;த்துள்ளனர்.

ஆனாலும், கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களுக்கு ஏன் காய்ச்சலுடன் கண் திறக்க முடியாமல் ஏற்பட்டது என்பது தொடர்பாக வைத்திய நிபுணர்களுக்கே தெரியவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் நோயாளர்களின் உறவினர்கள் வைத்திய சாலை நிர்வாகி கேசவனுடம், கண் சத்திரசிகிச்சை நிபுணரிடமும் விளக்கம் கேட்டுள்ளனர்.
சரியான பதில்கள் தமக்கு தரவில்லை என்றும், காய்ச்சல் மற்றும் கண் திறக்க முடியாமைக்கான காரணத்தினை இதுவரை கண்டறியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஒரு கண்ணில் கண் புரை சத்திரை சிகிச்சை மேற்கொள்வதற்கு 65 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டதாகவும், ஆனால், சத்திரசிகிச்சையினை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காய்ச்சல் மற்றும் கண் வீக்கத்துடன் திறக்கமுடியாமல் உள்ள ஏனைய மாவட்டத்தினைச் சேர்ந்த நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு 4 ஆயிரத்து 500 ருபா பணமும் கொண்டு வருமாறும் நோர்த்தேன் சென்ரல் வைத்தியசாலையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் சத்திரசிகிச்சை நிபுணர் மலரவனிடம் கேட்ட போது, கடந்த 5 வருடங்களாக தாம் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு வருகின்றதாகவும், இந்த வருடம் தான் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளதென்றும், ஏன் இவ்வாறு ஏற்பட்டதென்றும் தெரியவில்லை என்று அசண்டையீனமாக பதிலளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்கள் தற்போது 15 ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

பரிசோதனை செய்வதாக கூறுகின்றார்கள். என்ன பரிசோதனை என்பது பற்றியும் நோயாளர்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவும் இல்லை.

பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சையின் போது, தவறு என்ன நடந்ததென தெரியப்படுத்த வேண்டும். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் 65 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டு சத்திரசிகிச்சை மேற்கொண்ட நோயாளர்களுக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டதமைக்கு நிர்வாகம் உரியிநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், சத்திரிசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களிற்கு மீண்டும் பார்வை வருவதற்கான நடவடிக்கையினை உடனடியாக வைத்தியர் மலரவன் முன்னெடுக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளதுடன், பணத்தினை மட்டும் இலக்காக பார்க்காமல் நோயாளர்களின் நலனில் அக்கறை கொண்டு உரிய சிகிச்சைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் நோயாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் சரி மருத்துவ சேவையில் தவறினை இழைக்காது உரிய முறையில் சத்திரசிகிச்சைகளை முன்னெடுக்குமாறும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இது தொடர்பில் பாதிக்கபபட்டவர் ஒருவர் தெரிவிக்கையில் ,

இது தொடர்பில் பாதிக்கபபட்டவர் ஒருவர் தெரிவிக்கையில் ,

கடந்த சனிக்கிழமை எமக்கு பிரபல கண் வைத்திய நிபுணரால் சத்திர சிகிச்சைமேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதற்குஅனுமதிக்கப்பட்டேன். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை சிகிச்சைக்காக வருமாறு கூறினார்கள். அதன்படி மறுநாளும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான சிகிச்சைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடுதிரும்பினேன்.

அன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு நித்திரையின் பின்னர் மறுநாள் திங்கட்கிழமை காலை கண்ணில் வலி ஏற்பட்டது. சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்படும் சாதாரண வலியாக இருக்கும் என அதனை பெரிது படுத்தவில்லை.

அன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை சத்திர சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி , கண்ணில் வலி உள்ளதா , என வினாவினார்கள். நான் அதற்கு ஆம் என பதில் சொன்னதும் உடனடியாக வைத்திய சாலைக்கு வருமாறு கூறினார்கள்.

அதனை அடுத்து நான் அங்கு சென்ற போது , என்னுடன் சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களும் அங்கு வந்து இருந்தார்கள். எமக்கு தனியார் வைத்திய சாலையில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது.

அதன் பின்னர் திங்கட்கிழமை (நேற்றைய தினம்) இரவு எம்மை மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

தற்போது எமக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாக கண்ணில் ஏற்பட்ட கிருமி தொற்றுக்காவே எமக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

தனியார் மருத்துவ மனையில் கண்ணில் சத்திர சிகிச்சைக்காக 60 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையில் பணத்தினை செலவு செய்து உள்ளோம். தற்போது யாழ்.போதனா வைத்திய

சாலை கண் சிகிச்சை விடுதியில் தங்கி சிகிச்சை பெறுகின்றோம். என தெரிவித்தனர்.

மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு.*

அதேவேளை அது தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியிடம் கேட்ட போது ,

தனியார் வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட கிருமி தொற்றுகாரணமாக பாதிக்கப்பட்ட 07 ஆண்களும் 02 பெண்களும் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியாவில் இருந்து சிகிச்சைக்காக வந்துள்ளார்.  அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட அனைவரும் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.

கிருமி தொற்று தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை நுண்உயிரியல் பிரிவு மற்றும் வைத்திய நிபுணர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்கள். மாதிரிகளை கொழும்புக்கு

பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். தொற்றுக்கான காரணம் பரிசோதனை முடிவின் பின்னரே தெரிய வரும். தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு போதியளவான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் குணமடைந்து விடுவார்கள் என தெரிவித்தார்.

வெள்ளத்தில் மிதக்கும் வவுனியா மாவட்ட செயலகம்! 

 வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாளர்கள் தமது பணிகளை மேற்கொள்வதில் அசௌரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
வவுனியாவில் நேற்று மாலை கடும் மழை பெய்துள்ளது. இதனால் மாவட்ட செயலகத்திலுள்ள பல திணைக்களங்ளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
 இந்த நிலையில் பணியாளர்கள் பல அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இதனை சீர்செய்து தருமாறு பல தடவைகள் வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்

முல்லைத்தீவில் இடம்பெற்ற கண்காட்சி (படங்கள்)

 முல்லைத்தீவு கள்ளப்பாடு, வடக்கு றோயல் முன்பள்ளியில் நேற்று (24) கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டார்.
 முன்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி நடேசினி – இரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மாவட்ட, வலய, மற்றும் பிரதேச முன்பள்ளிகளின் இணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 மேலும் முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளிச் சிறார்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
அத்தோடு அங்கு சிறார்களால் அழகிய கண்காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 24, 2017

3வது திருமணம் செய்ய முயன்ற கணவன்; மனைவிகள் தடுத்ததால் தற்கொலை முயற்சி

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் வசித்துவரும் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த வாரம் 3வது தாரமாக பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
3வது திருமணத்திற்கு 2 மனைவிமார்களும் எதிர்ப்புத் தெரிவித்தமையால் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று காலை 9:00 மணியளவில் கணவர் துக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக தெரியவருகிறது.
இதனை அவதானித்த துணைவிமார் இவரை காப்பாற்றி சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார்.
ஒரு திருமணமே கை கூடாத நிலையில் பல இளைஞர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் போது இவனை 3ம் தாரமாக திருமணம் செய்ய முற்பட்ட அந்த யுவதி யார் என்பதை அறிவதற்காக அப்பகுதி இளைஞர்கள் ஓடித்திரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே: யாழில் மாபெரும் போராட்டம் (படங்கள்)

 உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே, அவர்களின் வழக்கிகளை அனுராதபுரத்தில் இருந்து வவுனியாவிற்கு மாற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பஸ் நிலையத்தில் இன்று மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
 புதிய ஜனநாயக மாக்கசிய லெனிக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பத்து மணிமுதல் 12 மணிவரை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது
 இதன் போது அரசிற்கு எதிராக பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன.
 இதன் போது கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Monday, October 23, 2017

யாழில் சுட்டுக்கொல்லப்பட்டவருடன் சென்றவர் வெளியிட்ட தகவல் இதோ..!!

யாழ். அரியாலை உதயபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றபோது அவருடன் கூடவே சென்ற மற்றுமொரு இளைஞர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது;
“எமது நண்பர் ஒருவரின் மோட்­டார் சைக்­கி­ளுக்கு, பெற்­றோல் இல்லை என்று தெரிவித்தமையால் நாமிருவரும் எங்களது மோட்டார் சைக்கிளிலிருந்து கொஞ்ச பெற்றோலை எடுத்துச் சென்று கொடுத்து விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தோம்.
அப்போது மணி­யந்­தோட்­டம் சந்­தியை அண்­மித்­த­போது எமக்கு எதிரே இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்திருந்தார்கள்.
எமக்கு அருகில் வந்ததும் தமது மோட்டார் சைக்கிளை திடீரென நிறுத்தினார்கள்.
அவர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எனது நண்பனுக்கு சுட்டதில் முதுகில் காயம் ஏற்பட்டது.
அப்படியே சென்றுகொண்டிருக்கையில் தனக்கு மயக்கம் வருவதாகக் கூறினார்.
இதையடுத்து அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் நண்பனை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் என்று கூறினார்..
இதுகுறித்து இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கையில்;
வீட்டில் உணவு உட்கொண்டிருந்த சமயம் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததைத்தொடர்ந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.
அதன் பின்னர் அவர் சுடப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்தது.” என்று கொலையுண்டவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை பகுதியில் காத்திருக்கும் ஆபத்து!!

கொழும்பில் உள்ள ஏரியில் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் முதலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டிய மற்றும் வெள்ளவத்தை எல்லையை பிரிக்கும் ஏரியில் முதலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனிதர்களை உண்ணும் ஆபத்தான இந்த முதலைகளால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த ஏரிக்கு அருகில் பாடசாலை மைதானம் ஒன்று உள்ளமையால் ஏரியில் உள்ள முதலைகளினால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அதிகாரிகளிடம் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் உயிரிழப்பு: யாழ்ப்பாணத்தில் அதிரடிப்படையினர் குவிப்பு

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்ததைத் தொடர்ந்து யாழ் நகரில் தற்பொழுது விசேட அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் உதயபுரம் பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
உந்துருளியில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
 படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வலப்பக்க முதுகில் குண்டு பாய்ந்ததனால் அதிகமான இரத்தப்போக்கு நிகழ்ந்துள்ளதாக யாழ். வைத்திய அதிகாரி சத்தியமூரத்தி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவரும் நிலையிலேயே யாழ் நகரமெங்கும் மேலதிக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Friday, October 20, 2017

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் வகுப்பு பகிஸ்கரிப்பு..!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பிலேயே மாணவர் ஒன்றியத் தலைவர் கிறிஸ்னமேன்ன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் உரிய தீர்வை பெற்று தருவதாக ஐனாதிபதி கூறியிருக்கும் நிலையில் தீர்வு கிடைக்காவிடின் மாணவர்களது போராட்டம் வேறு வேறு வடிவங்களிலும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 18, 2017

மீண்டுமொரு இரட்டைக்கொலை சம்பவம்

அடிக்கடி கூடிய நகைககளை அணிந்துதான் வெளியில் சென்று வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது அயலவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தில் ஒன்று.(சவுக்கடி கொலையிற்கு இதுவும் காரணமா????)

#ஏறாவூர் #பொலிஸ் #பிரிவில் #மீண்டுமொரு #இரட்டைக் #கொலை.

26 வயது தாயும், 11 வயது மகனும் படுக்கையறையில் அடித்து கொலை.

முருகன் கோவில் வீதி, சவுக்கடி, தன்னாமுனையை சேர்ந்த மதுவந்தி என்ற தாயும். மதுஷன் என்ற மகனுமே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.

குடும்பத் தலைவனான கணபதிப்பிள்ளை பீதாம்பரம் என்பவர் மத்தியகிழக்கு நாடொன்றில் எட்டு வருடமாக தொழில் செய்து வருகிறார்.
எதிர்வரும் டிசம்பரில் நாடு திரும்ப இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருந்த இவர்களை இரவுத் தூக்கத்திலிருக்கும் போது, கூரை ஓட்டை அகற்றி கயிறொன்றில் வீட்டுக்குள் இறங்கியே இப் படுகொலை நடந்துள்ளது.

நேற்று பிற்பகல் தனது சகோதரியின் நகையொன்றை செங்கலடி நகைக்கடையொன்றில் ஈடுவைத்து விட்டு 60000/= பெற்றுவந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டதோடு, அடிக்கடி கூடிய நகைககளை அணிந்துதான் வெளியில் சென்று வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை 09.00 மணியளவில் இவரது வீட்டு வளவினுல் மாடு மேய்வதைக் கண்ட அருகாமையில் வசிக்கும் சகோதரியின் மகள், மாட்டை துரத்திவிட்டு, திறந்திருந்த வீட்டினுல் சென்று சித்தியை அழைத்த போதுதான் சித்தியும், சித்தியின் ஒரேயொரு மகனும் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதைக் அவதானித்து அலரிக்கொண்டு ஓடி வந்துள்ளார்.

கிராமே சேவை அலுவலருக்கும், ஏறாவூர் பொலிசாருக்கும் விடயத்தை உறவினர்கள் தெரிவித்ததால்,
மேலதிக நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுக்கின்றர்.

UPDATE கடலில் காணாமல் போன 2 இளைஞர்கள்: ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன இரண்டு இளைஞர்களில் ஒரு இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மணற்குடியிருப்பு கடற்கரைக்கு பிற்பகல் இரண்டு மணியளவில் 7பேர் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது பெரிய அலை ஒன்று வந்துள்ளது. அதில் 5 பேர் சிக்காமல் தப்பியுள்ளனர். ஏனைய இருவரையும் அலை இழுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே ஒரு இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

முல்லைத்தீவில் சோகம் ! தீபாவளி நாளில் கடலில் குளிக்கச்சென்ற இரு மாணவர்கள் மாயம்

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் இன்று கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
 தீபாவளி நாளான இன்றையதினம் பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
 இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டுபேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
 கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்
 இதில் முல்லைத்தீவு உண்ணாப்புலவை சேர்ந்த 18 வயதுடைய அன்ரனி க்லாடஸ் வினோதன் குரூஸ் மற்றும் முல்லைத்தீவு மணற்குடியிருப்பை சேர்ந்த 17 வயதுடைய அன்ரன் அமல்ராஜ் டினோஜன்ஆகிய மாணவர்களே கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளனர்.
 குறித்த சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் விடுமுறை நாட்களில் இனிமையாக பொழுதை கழிக்கும் நோக்கோடு ஆயிரக்கணக்கான சுற்றுலா பிரயாணிகள் வந்து செல்லும் நிலையில் முறையான பாதுகாப்பு வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு கடற்பாதுகாப்பு படை (லைஃப் கார்ட்) வசதிகள் எவையும் இதுவரையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Monday, October 16, 2017

பிரிட்டனில் தாதியராக சூப்பரான வாய்ப்பு!

பிரிட்டனில் ஏற்படவுள்ள தாதியர் வெற்றிங்களை நிரப்ப, இலங்கையில் இருந்து தாதியர்களை பெறும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியுள்ளது. இதனால் அங்கு 42,000 தாதியருக்கு வெற்றிடம் ஏற்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
இந்தநிலையில் குறித்த வெற்றிடங்களை இலங்கையர்களை கொண்டு நிரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்கீழ் இலங்கையில் உள்ள பிரிட்டிஸ் கவுன்ஸில் பரீட்சைகளுக்கு தோற்றி தகமைகளுடன் ஆண் பெண் தாதியர்கள் இந்த துறைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய  சுவரொட்டிகளால் வவுனியாவில் பரபரப்பு

வவுனியாவின் சில பகுதியகளில் தீபாவளிப் பண்டிகை தொடர்பில் சிவசேனா அமைப்பினால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தீபாவளியை நமது இந்துத் தமிழ்க் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டாடுங்கள் பிறமதக் கடைகளில் பண்டிகைப்பொருட்கள் வாங்குவதைத் தவிருங்கள் இந்துத் தமிழ் வர்த்தகர்களே உசாராகுங்கள் என சிவசேனா அமைப்பினரால் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகள் இன்று அதிகாலை வேளையில் ஒட்டப்பட்டுள்ளன. 
வவுனியா நகரம் , புகையிரத நிலைய வீதி , சுற்றுவட்ட வீதி , பஜார் வீதி போன்ற பகுதிகளில் இச் சுவரொட்டிகளை காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.