திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மக்கள் அதிகளவில் குவிந்தள்ளனர். சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரையில் என தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாகக் காணப்படுகிறது. கூட்டத்தை சமாளிக்க தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மிகவும் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது.
நேற்று, சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகுந்து காண்ப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 93,290 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் தேவஸ்தானத்தில் நேற்று உண்டியல் வசூலும், லட்டு விற்பனையும் அதிகளவில் இருந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பின்படி நேற்று ஒருநாள் மட்டும் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வசூல் செய்யப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்னர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட்டுகளை வாரத்தின் இறுதி நாள்களான சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் நிறுத்திவைத்தது. இந்த நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் மட்டும் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி திவ்ய தரிசன டிக்கெட்டுகள் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் மட்டும் வழங்கப்படும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. விசேஷ நாள்களில் இது மாற்றத்துக்கு உள்ளாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment