Tuesday, August 22, 2017

ரெலோவிற்குள் கடும் குழப்பம்: விக்கி காரணம்?

வட மாகாண சபையில் ரெலோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியினை, ரெலோவின் உத்தியோகபூர்வ பரிந்துரையினை மீறி குணசீலனுக்கு வழங்குவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் செயற்படுவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியமையினைத் தொடர்ந்து ரெலோவிற்குள் கடும் குழப்பம் நிலவுகின்றது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோவின் கொள்கைகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் அப்பால் சென்று வடக்கு மாகாண முதலமைச்சருக்கு நெருக்கடியினை ஏற்படுத்தும் முகமாக முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையொப்பமிட்டிருந்தார்.
மேலும், முதலமைச்சரினால் இரண்டாம் முறை நியமிக்கப்படவிருந்த ஊழல் மற்றும் துஸ்பிரயோகங்கள் சம்பந்தமான விசாரணைக் குழுவிற்கு முகங்கொடுப்பதிலும் மறுப்புத் தெரிவித்துவந்தார்.
இந் நிலையில் முதலமைச்சரின் பணிக்குத் தடையாக இருக்கும் பா. டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அப் பதவிக்கு ரெலோவினால் பரிந்துரைக்கப்படும் வேறு ஒருவரை நியமிக்குமாறு முதலமைச்சரை உத்தியோகபூர்வமாக ரெலோ கேட்டிருந்தது.
அதற்கு முதலமைச்சரும் தாமதங்கள் இன்றி ஆமோதித்து கடிதப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார்.
ரெலோ சார்பான புதிய அமைச்சரை நியமிப்பதில் ரெலோ பல கூட்டங்களைக் கூட்டி ஆராய்ந்திருந்தது.
கடந்த ஜூலை 16 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் அமைச்சராக நியமிக்கப்படக்கூடிய உறுப்பினர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
அதில் தற்போது அமைச்சர் வாரியத்திற்கு நியமிக்கப்படுவதற்கு முதலமைச்சரினால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஊடகங்களின் தெரிவிக்கும் குணசீலனின் பெயர் பின்வரும் குற்றச்சாட்டுக்களின் காரணங்களால் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனினால் முற்றாக நிராகரிக்கப்பட்டது.
வட மாகாண சபை உறுப்பினர் குணசீலன், வட மாகாண சபை உறுப்பினராகப் ரெலோவின் ஊடாக பதவிக்கு வந்தபோதும், அவர் ரெலோவின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியே செயற்பட்டு வந்தார்.
இவர் மன்னார் மாவட்டத்திலும் சரி, ஏனைய மாவட்டங்களிலும் சரி ரெலோவினால் கூட்டப்படும் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை.
கட்சிக் காரியாலயங்களுக்கும் செல்வதும் இல்லை.
இதனையும் ரெலோவின் தலைவரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ‘புதிய அமைச்சராக யாரை நியமிப்பது’ எனக் கூட்டப்பட்ட ரெலோவின் அரசியல் உயர் பீடக் கூட்டத்தில் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், 2013 ஆம் ஆண்டு ரெலோ உறுப்புரிமை படிவத்தினை வழங்கிய போது அதனை நிறப்புவதற்கு குணசீலன் மறுத்திருந்தார்.
அதற்கான காரணமாக, வடக்கு மாகாண சபை தெரிவு செய்யப்பட்டவுடன் தன்னை அமைச்சராக கட்சி நியமிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மன்னார் மாவட்டத்தில் ரெலோ சார்பில் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாகிய குணசீலன் அம் மாவட்டத்தில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் முன்னாள் நகர சபைத் உறுப்பினர் குமரேஸ் என்பவரையே தனது அரசியல் சகாவாக இணைத்துச் செயற்பட்டார்.
குணசீலன் தற்போதும் ஓர் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் போலவே மன்னாரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
குணசீலன் ரெலோ கட்சியையும் ரெலோ உறுப்பினர்களைக் கண்டு கொள்வது கிடையாது.
2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் தமிழர் வாக்குகளே யார் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிக்கப் போகின்றது என்பது எதிர்வு கூறப்பட்டது.
இந்நிலையில் வடக்கு மக்கள் மகிந்தவிற்கு வாக்களிக்க மாட்டர் என்பதை மகிந்த தரப்பு முற்கூட்டியே உணர்ந்திருந்தது.
எனவே வட மாகாணத்திலுள்ள கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர் எவரையேனும் பயன்படுத்தி மைத்திரிக்குச் செல்லும் வாக்கினை குறைப்பதற்கு மகிந்தவின் தொடர்பாளர்கள் பணத்துடன் வடக்கிற்கு படையெடுத்திருந்தனர்.
இவர்கள் வடக்கில் கூட்டமைப்பின் குணசீலன் உள்ளிட்ட நான்கு மாகாண சபை உறுப்பினர்களை அணுகினர்.
அணுகியவர்கள், கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினராகிய நீங்கள் பகீரங்கமாக பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி மகிந்தவிற்கோ மைத்திரிக்கோ தமிழர்கள் வாக்களிகக்கூடாது எனக் கோரவேண்டும்.
அப்படிக்கோரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான உங்கள் கட்சியாலும் உங்களாலும் மகிந்தவிற்கு வடக்கில் அளிக்கப்படுகின்ற வாக்குகளை தடுக்க முடியாது.
ஆனாலும் மைத்திரியை ஆதரித்து நிற்கும் உங்களாலும் உங்கள் கட்சியாலும் மைத்திரிக்கு விழும் வாக்கினைத் தடுக்க முடியும்.
எனவே அதை நீங்கள் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி பகீரங்கப் படுத்தப்படுத்த வேண்டும்.
மாநாடு நடத்திய உடன் உங்கள் நால்வருக்கும் தலா 50 இலட்சம் விகிதம் இரண்டு கோடி வழங்குவோம்.
மகிந்த ஜனாதிபதியாகியவுடன் மிகுதி இரண்டு கோடி ரூபா வழங்குவோம் எனப் பேரம் பேசினர். இதை மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் முற்றாக நிராகரித்தனர்.
ஆனால் குணசீலன் மட்டுமே வவுனியாவில் பகீரங்கமாகப் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி மைத்திரிக்கும் மகிந்தவுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனக் கோரியிருந்தார்.
இவ்விடயம் தேர்தல் காலத்தில் ஊடகங்களிலும் கட்சிகள் மட்டத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்த ஒரு விடயமாகும்.
மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் மோசடி செய்தமை தொடர்பில் குணசீலன் ஏற்கனவே சிக்கலில் மாட்டியிருந்தார்.
ரூபா பத்து இலட்சத்திற்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது என்ற போர்வையில் துவிச்சக்கர வண்டிகள், தையல் இயந்திரம் பேன்றவற்றை கொள்வனவு செய்த குணசீலன் அவற்றினை தன்னுடைய உறவினர்களினதும் அவரது தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றியோரினதும் பெயர்களில் ‘உதவித் திட்டம்’ எனக் கொள்வனவு செய்தார்.
பின்பு அவற்றை அவர்களுக்கு வழங்கி வழங்கியவற்றை மீளச் சேகரித்து மன்னாரிலுள்ள தன்னுடைய உறவினரின் சைக்கிள் கடையொன்றுக்கு விற்றபோது பாதிக்கப்பட்டவர்கள் சம்பவத்தினை வெளிப்படுத்தினர்.
பின்னர் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வடமாகாணத் திணைக்களமும் மாகாண கணக்காய்வுத் திணைக்களமும் கடையில் விற்றபொருட்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது மாகாண சபை உறுப்பினர் மட்டத்திலும் கட்சி மட்டத்திலும் தெரிந்த விடயமாகும்.
குணசீலன் வைத்தியராக (MO) இருந்தபோது முன்னைய வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் திருமதி யூட் ரஜனி அவர்களால் குற்றமிழைத்தமைக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கூறப்பட்ட குற்றங்கள், துஸ்பிரயோகங்களுக்காகவே குணசீலனின் பெயரை ரெலோ அமைச்சுப் பதவிக்காக ஆராயவில்லை.
மிகுதியாக இருக்கின்ற ரெலோவின் வட மாகாண சபை உறுப்பினர்களில் விந்தனுடைய பெயரும் சிவாஜிலிங்கத்தின் பெயரும் கடந்த மாதம் (யூலை16) வவுனியாவில் நடைபெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டு வாக்கெடுக்கப்பட்டது.
இதன்போது ஒன்பது அரசியல் உயர்பீட உறுப்பினர்களில் கலந்துகொண்ட எட்டுப்பேரில், ஐந்து பேர் விந்தன் கனகரட்ணத்தினையும் மிகுதி மூவர் சிவாஜிலிங்கத்திற்கும் வாக்களித்தனர்.
இதன் பிற்பாடு ரெலோவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறீகாந்தா முதலமைச்சருக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டதன் மூலம் ஊடகங்களுக்கு ரெலோ விந்தனை அமைச்சராக்கப் பரிந்துரைப்பது பற்றிய தகவல் வெளியானது.
இதன் பின்னர் இம் மாதம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற ரெலோவின் 21 பேர் கொண்ட தலைமைக் குழுக்கூட்டத்திலும் 14 பேர் கலந்து கொண்டு விந்தனை அமைச்சராக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அம் முடிவும் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரெலோவின் பரிந்துரைகளும் முடிவுகளும் இவ்வாறாக இருக்கையில் முதலமைச்சர் குணசீலனை ரெலோவின் விருப்புக்குப் புறம்பாக அமைச்சராக நியமிக்கின்றமை ரெலோவிற்குள் கடும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது.
இம் மாதம் 05 திகதி கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தீர்ப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் ஏனைய பங்காளிக் காட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் முதலமைச்சரினால் அமைச்சரவை தொடர்பில் பங்காளிக் கட்சிகளின் ஒப்புதலோடும் விருப்பத்தோடுமே அமைச்சர்களின் நியமனம் இடம்பெறும் என முதலமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், பதவியிலிருந்து நீக்கப்படும் அமைச்சர்கள் குற்றமிழைத்தவர்களாகக் கருதப்படமாட்டர் எனவும் எதிர்கால அரசியல் விவகாரங்களை தொடர்ந்து சந்தித்துப்போசு முடிவுகளை எட்டுவது எனவும் முடிவெடுக்கப்பட்டிருந்து.
எனினும் அமைச்சர் விடயத்தில் ரெலோவின் பரிந்துரையினை முதலமைச்சர் புறந்தள்ளிச் செயற்படும் விவகாரமானது கூட்டமைப்பு கட்சிகள் மத்தியிலும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியிலும் சிக்கல்களைத் தோற்றுவித்ததுடன் பெரும் ஏமாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment