புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குமூல அறிக்கை ஊர்காவற்துறை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடமும் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் சந்தேக நபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க மன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்
கடந்தமுறை நீதிமன்ற உத்தரவிற்கவைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளிடம் பெறப்பட்ட வாக்குமூல அறிக்கைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது
இதையடுத்து சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மன்றில பிணை கோரிக்கையை முன்வைத்தனர்.
வித்யா கொலைச்சம்பவம் இடம்பெற்ற 2015ம் ஆண்டு புங்குடுதீவில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்கு மூலம் பெற இருப்பதுடன் மேலும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அறுவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் பெறப்படவேண்டிய சகல வாக்குமூலங்கள் மற்றும் விசாரணைகளை எதிர்வரும் மாதம் 04ம் திகதிக்குள் நிறைவுசெய்யுமாறு நீதிபதி குற்றப்புலனாய்வினர் மற்றும் அரச சட்ட மா அதிபர் திணைக்களத்தினருக்கு உத்தரவிட்டுள்ளது.
அதுவரை சந்தேகநபரான வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்
No comments:
Post a Comment