இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட உள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளின் நிலையினைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவற்றில் 5 விசைப்படகுகள் மீட்க முடியாத அளவுக்கு கடற்கரை மணலில் புதைந்துள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 42 இந்திய விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் விடுவித்திருக்கும் நிலையில் அந்தப் படகுகளின் நிலை தொடர்பாக ஆராய்வதற்காக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், தமிழக மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் சமீரன் மற்றும் ராமநாதபுரம், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவ சங்கங்களின் தலைவர்கள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு இரு தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்தது.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்ட 179 படகுகளில் இந்த 42 படகுகளை இலங்கை அரசாங்கம் அண்மையில் விடுவித்திருந்தது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன் துறை மற்றும் காரைநகர் பகுதிகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிராஞ்சி பகுதிக்கும் திருகோணமாலை மாவட்டத்துக்கும் சென்று விடுவிக்கப்பட்ட படகுகளைப் பார்வையிட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்டு முறையான பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் விடுவிக்கப்பட்ட 42 விசைப்படகுகளில் 5 விசைப்படகுகள் முற்றிலும் கடல் மணலில் புதைந்துபோன நிலையில் மீட்டு எடுக்க முடியாத அளவுக்கு சேதமடைந்து காணப்படுகின்றன. இதேபோல் மற்ற படகுகளின் இஞ்சின்கள் மிகவும் தேசம் அடைந்த நிலையில் இருப்பதைக் கண்ட தமிழக மீனவர் குழு அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில், '5 படகுகள் மீட்க முடியாத நிலையிலும், எஞ்சிய படகுகளை மீட்டு எடுத்து வரவும் அதிக செலவாகும்' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment