பன்னிரண்டு நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் 67 பேர் தொடர்ந்தும் அந்த அமைப்பிற்கு புத்துயிரூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் முன்னாள் முக்கியஸ்தர் விநாயகம், கபில் மாஸ்டர், முகுந்தன், தேவன் மற்றும் சிரஞ்சீவி மாஸ்டர் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் 67 பேர் தற்போதைக்கு பன்னிரண்டு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் சென்ற எந்தவொரு விடுதலைப் புலி முக்கியஸ்தரையும் இதுவரை கைது செய்ய முடியவில்லை.
இவர்கள் தங்களுக்குள் ஒரு வலையமைப்பை ஏற்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயிரளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் சிலரின் உதவியுடன் இராணுவத்தினர் மேற்கொண்ட ஒபரேசன் டபள் எட்ஜ் புலனாய்வு நடவடிக்கையின் போது இவர்கள் தங்களையறியாமல் இராணுவத்தின் வலையில் வீழ்ந்திருந்தனர்.
பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, இந்தியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, நோர்வே, மலேசியா, டென்மார்க், கட்டார், நெதர்லாந்து மற்றும் சுவிற்சலாந்து ஆகிய பன்னிரண்டு நாடுகளிலேயே மறைந்து வாழ்வதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவப் புலனாய்வாளர்கள் தொடர்பான விபரங்கள் வெளியானதன் காரணமாக தற்போது இந்த நடவடிக்கையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் சிங்கள ஊடகத்தின் செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment