புருவங்கள் எதற்காக?!
`நடிகை கார்த்திகாவோட புருவம் எவ்வளவு அழகு!’ என்று வியக்காதோர் மிகவும் சொற்பம். விஜயகாந்த் புருவத்தை உயர்த்தி, 'சிவ சிவ சங்கர...' என்று கோபமாக நடந்து வரும்போது என்னா கெத்து! நம் முகத்துக்கு அழகு சேர்ப்பதே புருவங்கள்தான். கண்களின் முக்கியத்துவத்தைக் காதலர்களே அறிவர்! அப்படிப்பட்ட கண்களுக்கு கிரீடமாக விளங்குபவை புருவங்களே! அதையும் தாண்டி நம் கண்களைச் சூரியன், தூசி, வியர்வை ஆகியவற்றில் இருந்து காத்து, பார்வையை மங்கவிடாமல் பார்த்துக்கொள்பவை இவை. சிலருக்கு புருவ முடி இல்லாமல் இருக்கும்... வேறு சிலருக்கு திடீரென்று அவற்றில் இருக்கும் முடி உதிர ஆரம்பித்து வயிற்றில் புளியைக் கரைக்கும்..
புருவ முடிகள் உதிர்வது ஏன்?
இதை ஆங்கிலத்தில் `Superciliary madarosis’ என்கிறார்கள். இது ஏற்படக் காரணம் தொற்றுநோய், தொழுநோய் போன்ற தோல் வியாதிகள், பிறவியிலேயே வரும் மரபுவழிக் குறைபாடு, தைராக்ஸின் சுரப்பி குறைபாடு, கீமோதெரபி (Chemotherapy) எனப்படும் புற்றுநோய் சிகிச்சை, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்களால் ஏற்படும் டெர்மடிட்டிஸ் (Dermatitis), தன்னுடல் தாக்குநோய் (Auto Immune Disease) போன்றவை.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயை பஞ்சில் தொட்டு புருவங்களில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து செய்துவரவும். விளக்கெண்ணெய் புருவ வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
தேங்காய் எண்ணெய்
இதைத் தூங்குவதற்கு முன்னர் புருவத்தில் தேய்த்து, காலையில் கழுவிவிடவும். இது முடியின் புரோட்டீன் இழப்பைத் தடுக்கும். இதிலிருக்கும் லாரிக் அமிலம் (Lauric acid) புருவ முடி வேர்களை நுண்கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து, முடி வளர உதவும்.
ஆலிவ் எண்ணெய்
இதை விரலால் புருவங்களில் தடவி, மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்துக் கழுவவும். இரண்டு வாரங்களுக்கு இதைச் செய்துவந்தால் முடி வளரும். ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கும். வைட்டமின் ஏ உடம்பில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெயை (Sebum) அதிகரிக்கும்.
பாதாம் எண்ணெய்
தூங்குவதற்கு முன்னர் இதைத் தேய்த்துவிட்டு காலையில் கழுவவும். இதிலிருக்கும் வைட்டமின் ஏ, பி, இ முடி வளர உதவும்.
No comments:
Post a Comment