Saturday, July 29, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக அஸ்வினின் கோச் நியமனம்! 

தமிழ்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ரவிச்சந்திரன் அஸ்வினின் பயிற்சியாளருமான சுனில் சுப்ரமணியம், இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக பி.சி.சி.ஐ- ஆல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 15-ம் தேதி, மூத்த இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு, 'அணி மேலாளர்' பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) விண்ணப்பங்களை வரவேற்றது. பி.சி.சி.ஐ வலைதளத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில், `அணி மேலாளர் பதவி குறைந்தபட்சம் ஒரு வருடம் இருக்கும். விண்ணப்பதாரர், முதல் தர போட்டிகள் அல்லது சர்வதேசப் போட்டிகளில் கிரிக்கெட் விளையாடியிருக்க வேண்டும்' என்று நிபந்தனையுடன் தெரிவித்திருந்தது. 
ஜூலை 21-ம் தேதிக்கு முன்னதாக 35 விண்ணப்பங்களில், 12 வேட்பாளர்களை பி.சி.சி.ஐ. நேர்காணலுக்குத் தேர்வு செய்தது. இவர்களுடைய பயோடேட்டா, பி.சி.சி.ஐ. செயலாளர் அமிதாப் சௌத்ரி மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் தலைவர் வினோத் ராய் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இறுதியாக, தமிழகத்தைச் சேர்ந்த சுனில் சுப்ரமணியம் இந்திய அணியின் மேலாளராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 50 வயதாகும் சுனில் சுப்ரமணியம் இந்தியாவின் முதல் முழுநேர அணி மேலாளராக ஒரு வருட காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், 74 உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி, 285 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவர், ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு முன் இலங்கை சென்று, இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைய உள்ளார். 

No comments:

Post a Comment